ஜி.எஸ்.டி நள்ளிரவு கருப்புக் கொடி ஏற்றுகிறார் வெள்ளையன்!

பொருள் மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி வரியை இன்று நள்ளிரவு முதல் அமல் செய்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இதனை பெரும்பலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்தாலும் ஆளும் பாஜக  ஜி.எஸ்.டி வரியை  இன்று நள்ளிரவு முதல் அமல் படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில்  நள்ளிரவு ஜி.எஸ்.டி  அறிமுகமாகும் நள்ளிரவு வணிகர் சங்க தலைவர் த. வெள்ளையன் கருப்புக் கொடி ஏற்றப் போவதாக அறிவித்துள்ளார்.  இது  தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: –

“ நம் நாட்டு வணிகம், விவசாயம் மற்றும் சுய தொழில்களை அந்நியர்கள் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்றே ஜி.எஸ்.டி. வரி விதிப்பைத் திணிக்கின்றனர்.

மக்களுக்கு மக்களின் சுயதொழில்களுக்கு மட்டுமில்லாமல், சுதந்திரத்துக்கே கேடு விளைவிக்கும் இச்சட்டத்தை 130 கோடி இந்திய மக்களும் எதிர்க்க வேண்டும். எமது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஜி.எஸ்.டி. அமலுக்கு வருகிற ஜூலை 1-ந்தேதியை கருப்பு நாள் என்று அறிவித்திருக்கிறது.

ஜி.எஸ்.டி.யை இந்திய நாடாளுமன்றத்தில், பிரணாப்முகர்ஜி ஜூன் 30-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு அறிமுகப்படுத்தும் அதே நள்ளிரவு நேரத்தில் தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக் கொடி ஏற்றி எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த இருக்கிறோம்.

சென்னையில் ஜூன் 30-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு கோயம்பேடு பழ அங்காடி வளாகத்தில் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கருப்புக் கொடி ஏற்றுகிறார்.

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இந்தியா முழுவதும் ‘பந்த்’ நடத்த அகில இந்திய வர்த்தக சங்கத் தலைவர் ஷியாம்பிகாரி மிஸ்ரா அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக வணிகர்களும் ஜூன் 30-ந்தேதி கடையடைப்பிலும், அன்று நள்ளிரவு கருப்புக்கொடியேற்றும் போராட்டத்திலும் கலந்து கொண்டு ஜி.எஸ்.டி.க்கு எதிராக அணி திரளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு த.வெள்ளையன் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*