பெங்களூருவில் காவிரி உரிமை பேசிய விஷால்!

பெங்களூருவில் ‘ரகுவீரா’ என்ற கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இவ்விழாவில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விழாவில் கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலர் காவிரி பிரச்சினை குறித்து பேசினார்கள்.

அதாவது “நடிகர் விஷால் தமிழ்நாட்டிலிருந்து வந்து விழாவில் கலந்துகொண்டுள்ளார். அவருக்கு மரியாதை கொடுக்கிறோம். அதே வேளையில், தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று நாங்கள் கூறவில்லை. எங்களுக்கே தண்ணீர் இல்லை” என்றுதான் கூறுகிறோம் என்றனர்.

இதைத்தொடர்ந்து விஷால் பேசியதாவது:-

“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு. கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும், தாய்மொழியான தமிழில் பேசுவதில் தமிழனாக பெருமையடைகிறேன். தமிழில் தான் பேசுவேன். தவறாக எண்ண வேண்டாம். தண்ணீர் கேட்பது என்பது தமிழர்களுடைய உரிமை. அதனை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.

நாம் அனைவரும் இந்தியாவில் இருக்கிறோம். அதனால் எங்களுடைய உரிமையைக் கேட்கிறோம், அதை தவறு என்று எவராலும் சொல்ல முடியாது. அதே வேளையில், கர்நாடகாவிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உங்களுடைய கடமை. அதேபோல் தமிழகத்திலும் கர்நாடக மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களுடைய கடமை.

மொத்தத்தில் அனைவருமே இந்தியர்கள். வெவ்வேறு மாநிலம் என்று பார்ப்பது அவசியமற்றது. இந்தியா என்று வரும் போது அனைவருமே ஒன்று தான். அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. ஏன் தமிழர்கள் என ஒதுக்கி, தண்ணீர் தர மாட்டோம் என்கிறீர்கள்?. கர்நாடகாவுக்கு மட்டுமே காவிரி தண்ணீர் என்று கிடையாது. எங்களுக்கும் அதில் உரிமை இருப்பதால் தான் கேட்கிறோம்.

தண்ணீர் கேட்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. கர்நாடகாவிலிருந்து எந்தவொரு தயாரிப்பாளரும் தமிழகத்துக்கு வந்து படம் தயாரித்தால், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முழு ஒத்துழைப்பு அளிப்போம். கர்நாடக தயாரிப்பாளர் சங்கத்திலும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் கண்டிப்பாக செய்து தர தயாராக இருக்கிறோம்” என்று பேசினார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*