ஜி.எஸ்.டி நாடு முழுக்க கடும் எதிர்ப்பு!

ஜி.எஸ்.டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரி இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் நிலையில் , நாடு முழுவதும்  இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.  அனைத்துக் கட்சிகளையும் அழைத்து இதை ஒரு திருவிழா மாதிரி பாஜகவினர் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், திரிணாமூல் காங்கிராஸ். ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி என்று பிரதான கட்சிகள் அனைத்தும் ஜி.எஸ்.டி சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து விழாவை புறக்கணித்திருக்கிறது. ஆனால் அதிமுக இந்த வரிவிதிக்கும் விழாவில் போட்டி போட்டு கலந்து கொள்கிறது. அதிமுகவின் மூன்று அணிகளுக்குமே இந்த வரி விதிப்பு  விழா நிகழ்வில்  விருந்து  வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
கான்பூர், காஸியாபாத்தில் போராட்டம்
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர், காஸியாபாத் உள்ளிட்ட நகரங்களிலும், குஜராத் மாநிலத்தின் சூரத் நகரிலும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கான்பூர் நகரில் வியாபாரிகள் ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் வியாபரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காஸியாபாத் நகரில் வியாபாரிகள் சார்பில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே சூரத் நகரில் ஜவுளித் துறை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜி.எஸ்.டி.யை எதிர்த்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது போல தமிழகத்தில் வணிகர்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனர். வருகிற 3-ஆம் தேதி முதல் திரையரங்கங்கள் மூடப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  அது போல சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்களும், தீக்குச்சி தயாரிப்பாளர்களும் போராட்டம் அறிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி பற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் யாருக்கும்  தெரியாத காரணத்தால் பாதிக்கப்படும் போது போராடாலாம் அல்லது வழக்கம் போல இதற்கும் பழகிக் கொள்ளலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*