மதத்துக்காக மரத்தை அழிக்கும் ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் அத்தி மரங்களை சகுனத்தடையாகக் கருதி அவற்றை அகற்ற உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உத்தரபிரதேச மாநில முதல்வராக இந்துத்துவா சிந்தனையுடைய யோகி ஆதித்யநாத் பதவியேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைக்குரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆண்ட்டி-ரோமியோ அமைப்பை உருவாக்கி காதலர்களை தாக்குவது, பசுக் காவலர்கள் அமைப்பு சாமானிய மக்களை தாக்குவதை கண்டுகொள்ளாமல் இருப்பது, இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருவது போன்ற சர்ச்சைக்குரிய முறையிலேயே நடந்து வருகிறார். இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் ஒரு பதற்றமான சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். சாமானிய மக்களின் உணவு சுதந்திரத்தை பறிக்கும் விதமாக மத்திய அரசு கொண்டு வந்த மாட்டிறைச்சிக்குத் தடையை பெருமளவு ஆதரித்து பேசினார் யோகி.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை என்ற புனித யாத்திரை சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும். இந்தாண்டு யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு மேற்கொண்டு வரும் நிலையில் இந்த யாத்திரையின்போது பின்பற்றப்பட வேண்டிய முறைகள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், கன்வார் புனித யாத்திரை மேற்கொள்ளப்படும் வழியெங்கும் அதிகளவில் காணப்படும் அத்தி மரங்களை வெட்ட உத்தரவிடப்படப்பட்டுள்ளது. ‘விரதம் இருந்து புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் செல்லும் வழியில் அத்தி மரங்கள் இருப்பது அபசகுணம்’ என்று குறிப்பிட்டு ஆதித்யநாத் இந்த உத்தரவை விதித்துள்ளார். மேலும் யாத்திரையின் போது சினிமா பாடல்கள் மற்றும் ஆபாச பாடல்களை கேட்கக்கூடாது எனவும், பஜனை பாடல்களை மட்டுமே கேட்க வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு மாநிலத்தை ஆளும் முதல்வர் மரங்களை காப்பதையே முக்கியத்துவமாக கருத வேண்டுமேயொழிய அழிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது. ஆனால் இந்துத்துவா சிந்தனையுடைய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு மரத்தை அபசகுணமாக அறிவித்திருப்பது மூடநம்பிக்கையின் உச்சகட்டம் என அனைவராலும் கூறப்பட்டு வருகிறது. யோகி ஆதித்யநாத்தின் இந்த உத்தரவுக்கு இயற்கை ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மதத்துக்காக மரத்தை அழிக்கும் யோகி ஆதித்யநாத்தின் செயல் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*