கதிராமங்கலம் : செய்வீர்களா செயல் தலைவரே?

ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறுகளை தங்கள் விவசாய நிலங்களுக்கு மத்தியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓன்.ஜி.சி நிறுவனமும் வெளியேறக் கோரி கதிராமங்கலம் உள்ளிட்ட பல கிராம மக்கள் போராடி வருகிறார்கள்.
கடந்த 30-ஆம் தேதி எண்ணெய் குழாய்க்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில் போலீசார் கிராம மக்கள் மீது தடியடி நடத்தி சிலரை கைது செய்தனர். ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

கதிராமங்கலம் கிராமத்தில் ஆண்கள் வெளியேறி விட்டதால் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் “தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலத்தை தனி தீவு போல் துண்டாக்கி அங்கு வாழும் மக்கள் மீதும், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீதும் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி அராஜகமாக கைது செய்திருப்பதற்கும், அக்கிராமத்தையே போர் பகுதி போல் அறிவித்து ஆயிரக்கணக்கில் போலீஸாரை குவித்து வைத்திருப்பதற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

திடீரென ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் குழாய்கள் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு மக்கள் கொதித்து எழுந்ததை “காவல்துறை” கொண்டு அடக்க நினைப்பது ஆளுகின்ற அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை காட்டுகிறது. அந்த கிராமத்தில் தொடர்ந்து நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டு கொள்ளாத மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான “குதிரை பேர அரசு”, “குட்கா போலீஸ் அதிகாரிகள்” சிலரை வைத்துக்கொண்டு பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக, குறிப்பாக பெண்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது மனித உரிமை மீறிய செயல் மட்டுமல்ல- ஜனநாயக உணர்வுகளை நசுக்கும் முயற்சியாகும். ஆபத்தான விபத்து ஒன்று நடந்த பிறகுகூட கவலையில் உள்ள அந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொல்ல முடியாத அதிமுக அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளை ஏவி விட்டு இப்படி ஜனநாயக ரீதியான போராட்டங்களை அடக்குவது வேதனைக்குறியது.

தமிழக அரசு நிர்வாகம் மட்டுமல்ல இன்றைக்கு காவல்துறை நிர்வாகமும் அதிமுக ஆட்சியில் “குரங்கு கையில் கிடைத்த பூமாலை” போல் படாத பாடுபடுகிறது. குதிரை பேர அரசோ ஓ.என்.ஜி.சி. போன்ற மத்திய அரசு நிறுவனங்களுக்கும் “ஏஜெண்டாக” மாறி தன் சொந்த மக்கள் மீதே காவல்துறையை வைத்து தடியடி நடத்தும் கொடுமையான காரியத்தை செய்திருக்கிறது. ஏற்கனவே சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு முன்பு எப்போதோ நடத்திய போராட்டத்திற்காக திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பிறகு புதுக்கோட்டையில் “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடுவோர்” மீது அங்குள்ள போலீஸாரை ஏவி விட்டு அடக்குமுறை நடத்தப்பட்டது. இப்போது தஞ்சாவூரில் உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் “ஏவலாளியாக” நின்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மீது அறிவிக்கப்படாத போரை நடத்தி வருகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்கள் என்று வெளிவந்துள்ள செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

ஆகவே கைது செய்யப்பட்ட கதிராமங்கலம் பொதுமக்களையும், விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்து, அந்த கிராமத்தில் முற்றுகையிட்டுள்ள போலீஸார் அனைவரையும் அங்கிருந்து வெளியேற உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை கேட்டுக்கொள்கிறேன். அக்கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்த்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்பப் பெறுவதோடு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பணிகளால் மக்களின் பாதுகாப்பிற்கும், சுற்றுப் புறச்சூழலுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாதவாறு தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆனால், கும்பகோணத்தை அண்டிய கதிராமங்கலம் உள்ளிட்ட சுமார் 70 கிராமங்களில் இயல்பு நிலை இல்லை.அறிவிக்கப்படாத அவசர நிலை தமிழகத்தில் உள்ளது போல இந்த கிராமங்களில் அறிவிக்கப்படாத 144 உள்ளது. வெளியார் யாரும் இயல்பாக இந்த பிராந்தியத்திற்குள் நுழையவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் கதிராமங்கலம் கிராம மக்களின் நிலை பரிதாபகரமான உள்ளது.
போர் பகுதிகளை அரசுகள் மூடி போரை நடத்துவது போல கதிராமங்கலம் மக்களை தமிழகத்தின் பிற மக்களிடம் இருந்து துண்டித்து வைத்திருக்கிறார்கள். ஆளும் அரசு முதுகெலும்பற்ற அரசாக மத்திய பாஜக அரசின் பொம்மை அரசாக உள்ள நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கதிராமங்கலம் சென்று அந்த மக்களை சந்திக்க வேண்டும் என்று அந்த மக்கள் விரும்புகிறார்கள். செய்வீர்களா செயல் தலைவரே?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*