தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக்கூடாது : கர்நாடக விவசாயிகள் மறியல்!

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நதிநீர்  பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நீதிமன்றத்தையும் நாடி அவ்வப்போது உத்தரவுகள் பெறப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்துக்கு முறையான அளவு தண்ணீரை கர்நாடக வழங்குவதில்லை. இங்குள்ள அரசியல் கட்சியினரும் இவ்விவகாரத்தில் ஒற்றுமையாக செயல்படாமல் இருந்து வருகின்றனர். இதேபோல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவிலும் அம்மாநில விவசாயிகள் மற்றும் சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அம்மாநில அரசு சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. அதன்படி, கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் வெளியேறும் உபரிநீர், தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக விவசாயிகள் நேற்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழகத்துக்கு திறந்து விடப்படும் உபரிநீரை சேமிக்கும் வகையிலான நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என வலியுறுத்திய விவசாயிகள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடந்த 30-ஆம் தேதியும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக விவசாயிகள் சங்க தலைவர் மடேகவுடா என்பவர் கூறுகையில், இங்கிருக்கும் விவசாயிகளுக்கே இந்த தண்ணீர் போதாது. எனவே அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, காவிரி நீர் மேலாண்மை நிறுவனத்தின் பொறியாளர் பசவராஜே கவுடா கூறுகையில், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு இன்று(நேற்று) வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்து விட்டுள்ளோம். ஏற்கனவே, ஜூன் 29-ஆம் தேதி 3000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து ஜூன் 30-ஆம் தேதி ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ஆற்றில் இறங்கி கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*