கைதானவர்கள் விடுவிக்கப்படும் வரை பேச மாட்டோம்!

ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தி கைதானவர்கள் விடுதலையாகும் வரை கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லையென்று கதிராமங்கல மக்கள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 30-ஆம் தேதி எண்ணெய் கசிவு ஏற்பட்டது. மேலும் தீயும் பற்றியது. இதனால் அச்சமடைந்த மக்கள் எண்ணெய் கசிவு நடந்த பகுதியை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் வரவேண்டுமென்று காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதத்தை காவல்துறையினர் தள்ளுமுள்ளாக மாற்றி தடியடியில் முடித்து வைத்தனர். மேலும் 9 பேரை கைது செய்தனர். இதனையடுத்து கைதானவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டம் நடத்தப்படுமென்று கூறி கதிராமங்கல மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் பள்ளி மாணவர்களும் இறங்கியுள்ளனர். ஒரு மாநிலத்தில் பள்ளி மாணவர்களை போராட்ட களத்துக்கு அழைத்த வந்த மோசமான முன்னுதாரணத்தை தற்போதைய தமிழக அரசும், தமிழக காவல்துறையும் பெற்றிருக்கின்றன. இதற்கிடையே தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த கைதான 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியபோது அமைதியாக இருந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை இந்த விவகாரம் தொடர்பாக 4 நாட்கள் கழித்து மக்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்று நேற்று அறிவித்திருந்தார். அதன்படி திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கதிராமங்கல மக்கள் அறிவித்துள்ளனர். மேலும் கைதானவர்கள் விடுதலையாகும் வரை பேச்சுவார்த்தைக்கும் வரமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். மக்கள் நலனுக்காக போராடியவர்களின் விடுதலைக்காக வீரியமாக போராடி வரும் கதிராமங்கல மக்களை பாராட்டி சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். மேலும் 4 நாட்கள் கழித்து போராட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்று கூறிய தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையை விமர்சித்தும், கிண்டல் செய்தும் வருகிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*