மீண்டும் கருணாநிதி செம்மொழி விருது!

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது என்பது இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு அளிக்கப்படும் விருதாகும். முன்னாள் தமிழக முதலமைச்சரான மு. கருணாநிதி, அவருடைய சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை” ஒன்றை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிறுவினார். இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டிதழும், ஐம்பொன்னாலான நினைவுப் பரிசும் அடங்கிய விருது அளிக்கப்படுகிறது.

2009ஆம் ஆண்டுக்கான ‘‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித்தமிழ் விருது’’ (முதல் விருது) பின்லாந்து நாட்டை சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஜனாதிபதி கையால் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தால், கடந்த சிலஆண்டுகளாக இந்த விருதுகள் முறையாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பி கருணாநிதி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது மத்திய அரசு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த விருதுகளை மீண்டும் வழங்க முடிவு செய்துள்ளது. 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான பரிந்துரைகள் வரவேற்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்த பரிந்துரை படிவத்தினை www.cict.in என்ற வலைதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பரிந்துரைகளை 10.7.2017 (ஜுலை 10) ஆம் நாளுக்குள், இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், எண்.40, நூறடிச் சாலை, தரமணி, சென்னை- 600 113 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*