ஆகஸ்ட் 4-க்கு பிறகு தமது செயல்பாடுகளை பாருங்கள் : தினகரன்

அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவை துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் சந்தித்தார்.

சசிகலாவின் சிறை, தினகரனின் சிறைக்கு பிறகு அதிமுகவில் காட்சிகள் மாறியிருக்கின்றன. தனது அதிகாரத்தை முழு அளவில் கட்சிக்குள் பயன்படுத்தி வந்த டிடிவி தினகரன் தற்போது முழுமையாக ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். தினகரனுக்கு ஆதரவாக 34 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். இவர்களை கையில் வைத்துக் கொண்டு கட்சியையும், குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் பாஜகவையும் வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று கருதிய தினகரனுக்கு அதிர்ச்சி தரும் விதமாக பாஜக டிடிவியை கண்டுகொள்ளவில்லை. இதனால் வேறு வழியின்றி குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது ஆதரவையும் பாஜகவுக்கு அளித்தார் தினகரன். இதற்கிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தனர். கடந்த சில முறைகள் சசிகலாவை சந்தித்த பின் பேசிய தினகரன் 60 நாட்கள் பொறுமையாக இருப்பேன் என்று மறைமுக எச்சரிக்கையெல்லாம் விடுத்துப் பார்த்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அது பெரும் அளவு அதிர்வுகளை உருவாக்கவில்லை. மேலும் டிடிவி தினகரனை முழுதாக கட்சியிலிருந்து நீக்கிவிட்டு  பன்னீர் செல்வம் அணியும், பழனிசாமி அணியும் இணைவதற்கு ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் நிதியமைச்சர் ஜெயக்குமாரும் அதனை உறுதிப்படுத்துவது போல் கருத்துக்களை கூறி வந்தார். இதற்கிடையே தினகரனுக்கும் திவாகரனுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் அதனை நான்தான் முதலில் பேசி சமாதானப்படுத்தி வைத்ததாகவும் சசிகலாவின் கணவர் நடராஜன் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், டிடிவி தினகரன்  தனது பெசன்ட் நகர் வீட்டில் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று திடீரென்று மும்பைக்கு கிளம்பி சென்றார்.. அதனைத் தொடர்ந்து இன்று மும்பையிலிருந்து நேராக பெங்களூர் சென்று சிறையில் உள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார்.  அவருடன், கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி மற்றும் எம்.எல்.ஏ வெற்றிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சசிகலா – தினகரன் சந்திப்பின்போது, அதிமுக நிலவரம் மற்றும் தமிழக அரசியல் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சிறையிலிருந்து வெளிவந்த தினகரன் சசிகலாவை சந்திப்பது இது 6-வது முறையாகும். இந்த சந்திப்புக்கு பின் தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவின் இரு அணிகளையும் நிச்சயம் இணைக்க முடியும். குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிக்கும்படி யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை. ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு பிறகு தமது செயல்பாடுகளை பாருங்கள் என்றார். மேலும் எனக்கும் திவாகரனுக்கும் எந்த மோதலும் இல்லையென்றும் அதிமுக குறித்து பேச நடராஜனுக்கு அதிகாரமில்லையென்றும் அதிரடியாக தெரிவித்தார்.  தினகரன் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு பிறகு என்ன செய்ய காத்திருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் பதற்றமடைந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. தினகரனின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு அதிரடியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடத்திலும் எழுந்திருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கும் என்றும் கருதப்படுகிறது. மேலும் நடராஜன் குறித்து தினகரன் இவ்வாறு கூறியிருப்பதன் மூலம் சசிகலா குடும்பத்துக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் இன்னும் தீரவில்லையென்றே தெரிகிறது. இதனால் அதிமுகவில் இன்னும் என்னென்ன களேபரங்கள் நடக்க போகிறதென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*