திருமுருகன் காந்தி கைது : உள்துறை செயலாளர், காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ்!

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது தொடர்பாக  தமிழக உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த நூற்றாண்டில் இதுவரை இல்லாத அளவு இலங்கை அரசு மிகப்பெரும் இன அழிப்பை மேற்கொண்டது. இலங்கை ராணுவம் நடத்திய இன அழிப்பு நடவடிக்கையில் பல லட்சம் தமிழர்கள் உயிரிழந்தனர். இந்த இனப் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரீனா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படுவதுண்டு. கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் அரசியல் ஆளுமைகளே இந்நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் அனுமதி வழங்கி வந்தனர். ஆனால் தற்போது பாஜக கட்சியின் ஆட்சியை தமிழகத்தில் நடத்தி கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தது. ஆனால் தடையை மீறி மெரீனா கடற்கரையில் கடந்த மே 21-ஆம் தேதி  மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சட்டவிரோதமாக கூடியதாக கூறி திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. மேலும் திருமுருகன் காந்தி மீது தமிழக அரசு பல்வேறு வழக்குகளை தொடுத்தது.

இந்நிலையில்,குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்துக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம் மற்றும் கலையரசன், இந்த வழக்கில் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து தமிழக உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் திருமுருகன் காந்தி கைது தொடர்பாக உள்துறை செயலர், சென்னை மாநகர காவல் ஆணையர்  வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*