நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கு : ஜூலை 11-ல் விசாரணை!

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டுமென்ற மாஃபா பாண்டியராஜன் தொடுத்த வழக்கு வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்துவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இரண்டாக அதிமுக உடைந்ததால் இரு அணிகளும் தங்களது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்கும் நிலை உருவானது. இதனால் சசிகலா அணியினர் அதிதீவிர முயற்சியில் இறங்கினார்கள். அதன் உச்சக்கட்டமாக அதிமுகவின் எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரெசார்ட்டில் தங்கவைத்தனர் சசி அணியினர். எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தபோதும் சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் சசிகலாவால் முதல்வராக முடியவில்லை.இதனால் தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அறிவித்துவிட்டு சிறைக்கு சென்றார். இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்ததால் பழனிசாமி அரசு தப்பியது. ஆனால் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏக்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்கும்படி பணம் கொடுக்கப்பட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் கூறிய நிலையில் அதனைஎம்.எல்.ஏக்கள் மறுத்து வந்தனர். ஆனால் அவர்களின் முகமூடியை கிழிக்கும் விதமாக டைமஸ் நவ் சேனல் மதுரை தொகுதி எம்.எல்.ஏ சரவணன் பணப்பட்டுவாடா தொடர்பாக பேசிய வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பு நடத்தியது, மறைமுக வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு உரிமை இருந்தும் அதை பயன்படுத்தாதது குறித்தும். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எம்.எல்.ஏக்கள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்றும் அதில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மாஃபா பாண்டியராஜன் சார்பில், மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன் ஆஜரானார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்  இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. மேலும் அன்றைய தினம், மத்திய அரசின் அட்வகேட் ஜெனரல் கே.கே.வேணுகோபால் இவ்வழக்கில் ஆஜராக வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*