புதுச்சேரி ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம் : நாராயணசாமி

புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகை பாஜக கட்சியின் தலைமை அலுவலகமாக செயல்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அம்மாநில முதல்வர் நாராயணசாமியுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். கிரண்பேடி தனது அதிகாரத்தின் வரம்பை மீறி செயல்படுகிறார் என்று புதுச்சேரி மாநில முத்லவர் நாராயணசாமி கூறிவருகிறார். அதற்கேற்றார் போல்தான் கிரண்பேடியும் நடந்து வருகிறார். எம்.எல்.ஏக்களிடம் சொல்லாமல் தொகுதிக்கு செல்வது, சமூக வலைதளங்களில் எம்.எல்.ஏக்கள் போன்றவர்களை விமர்சிப்பது போன்ற செயல்களை செய்து வந்த பேடி உச்சக்கட்டமாக அரசின் சிபாரிசு இல்லாமலேயே தன்னிச்சையாக பாஜக கட்சியின் மூன்று பிரமுகர்களை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்தார். மேலும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தனது அலுவலகத்திலேயே வைத்து பதவி பிரமாணமும் செய்து வைத்தார். அந்த மூவரில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் ஆவார். காவல்துறையில் இருந்த போது தன்னை பொதுநலவாதியாக காட்டிக்கொண்ட கிரண்பேடி அரசியலுக்கு வந்த பிறகு இந்துத்துவா கொள்கையை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார். மேலும் அவரின் இச்செயல் மூலம் புறவாசல் மூலம் பாஜகவினருக்கு புதுச்சேரி மாநிலத்தில் அதிகாரத்தை பெற்று தந்திருக்கிறார். கிரண்பேடியின் இந்நடவடிக்கை அனைவரிடத்திலும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. மேலும் புதுச்சேரி மாநிலத்தை காவிமயமாக்க கிரண்பேடி பகிரங்கமாக இறங்கியிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்நிலையில், கிரண்பேடியின் இந்நடவடிக்கை குறித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரி அரசு மீது துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு சரியாக நடந்துகொண்டுள்ளது.  மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி மாணவர்கள் சேரமுடியாத வகையில் 45 இடங்கள் காலியாக உள்ளன.  புதுச்சேரி ஆளுநர் மாளிகை, பாஜக தலைமை அலுவலகமாக செயல்படுகிறது.  புதுச்சேரி அரசு மீது களங்கம் ஏற்படுத்த துணைநிலை ஆளுநர் அலுவலகம் செயல்படுகிறது என்று கூறினார். மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னால் கால் ஊன்ற முடியாத மாநிலங்களில் தனது கைக்கூலிகளை ஆளுநர்களாக நியமித்து மாநில உரிமையில் தலையிட்டு வருகிறது. இதனை பாஜக உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டுமென்று பாஜகவை விமர்சித்தும், கிண்டல் செய்தும் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*