ஆகஸ்ட் 5 முதல் தினகரன் சுற்றுப்பயணம்!

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அவரது ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்த டிடிவி தினகரனை கட்சியிலிருந்து முழுமையாக ஒதுக்கியிருக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி அணியினர். இதனால் கோபமடைந்த தினகரன் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தரும் விதத்தில் 34 எம்.எல்.ஏக்களை அவர் பக்கம் இழுத்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டார்கள், குடியரசுத் தலைவர் தேர்தலை வைத்து தினகரனை மீண்டும் கட்சிக்குள் இழுத்துவிடலாம் என்று முயற்சித்தார்கள். ஆனால் டெல்லியின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையாக இருப்பதால் பழனிசாமி எதற்கும் அஞ்சாமல் தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கியே வைத்திருக்கிறார். இதனால் தினகரன் கடும் அதிருப்தியடைந்திருக்கிறார். இதற்கிடையே மன்னார்குடியில் தினகரன் தரப்பினர் கூட்டவிருந்த பொதுக்கூட்டம் திவாகரனின் நெருக்கடியால் கலைக்கப்பட்டது. திவாகரனும் தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் தினகரனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் திவாகரன் வரும் 15-ஆம் தேதி மன்னார்குடியில் பொதுக்கூட்டம் கூட்டவிருக்கிறார். இதற்கு பழனிசாமியும் மறைமுகமாக தனது ஆதரவை அளிக்கப்போவதாக கூறப்படுகிறது. அதே நாளில் ஓ.பன்னீர் செல்வமும் திருவாரூரில் கூட்டம் நடத்துகிறார். ஒரே கூட்டமாக இருந்த அதிமுக கட்சி தற்போது தனித்தனியாக கூட்டம் நடத்தி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை குறைப்பதற்காகவும், மக்கள் மத்தியில் தனது ஆதரவு என்னவென தெரிந்து கொள்வதற்கும் டிடிவி தினகரன் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதுகுறித்து டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கூறுகையில் அதிமுகவின் துணைப் பொதுச்செயலர் தினகரன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு பிறகு தமது செயல்பாடுகளை பாருங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கட்சியும், குடும்பமும் கைவிட்ட தினகரனை இந்த சுற்றுப்பயணம் காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த சுற்றுப்பயணம் மூலம் கட்சி தொண்டர்களிடமும், மக்களிடமும் உள்ள தனது செல்வாக்கை தெரிந்துகொண்டு தனது அடுத்தக்கட்ட நகர்வை தினகரனை முன்னெடுப்பார் என்று தெரிகிறது. ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக இப்படி துண்டு துண்டாக சிதறிக்கிடப்பதை அதிமுகவின் தொண்டர்கள் மிகுந்த கவலையுடன் கண்டு கொண்டிருக்கிறார்கள்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*