கடத்தல், போதை மருந்து, ஆபாசப்படம்: கம்பி எண்ண வைத்த எஸ்.பி. பொன்னி!

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் யோகாவை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வைத்தது. இந்தியாவிலும் ஆண்டு தோறும் யோகா தினத்தை பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது.  இதற்காக மத்திய அரசு நிறுவனமான ஆயுஷ் கோடிக்கணக்கான நிதியை கொட்டி வருகிறது. மத்திய தரவர்க்கம் தன் பிரச்சனைகளுக்கு யோகா தீர்வென்று நம்பும் நிலையில், நாடு முழுக்க யோகா சாமியார்களும், யோகா மாஸ்டர்களும் புற்றீசல் போல கிளம்பி கடை பரப்பியிருக்கிறார்கள். ஒரு பக்கம் மக்களிடம் இருந்து பணம் பறிக்கவும், இன்னொரு பக்கம் ஆளும் பாஜக அரசின் நல்லெண்ணத்தை பெறவும் யோகா ஒரு கருவியாக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு தம்பதியை மிரட்டு போதை வஸ்துகளுக்கு அடிமையாக்கி பாலியல் ரீதியாக புகைப்படம் எடுத்து மிரட்டி வந்த யோகா தம்பிகளை தமிழக போலீசார் கைது செய்து  தெலங்கானா போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இச்சம்பவம் சிதம்பரம் நகரில் நடந்துள்ளது .

தெலுங்கான மாநிலம் ஐதராபாத் கொண்டாப்பூர் பகுதியியை சேர்ந்தவர் ஜெகதீஷ் கென்டி (வயது44). இவரது மனைவி கிரண்கென்டி (40). இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். அமெரிக்காவில் பணி செய்த இருவரும் 2011-ஆம் ஆண்டுவரை பணியாற்றி விட்டு நாடு திரும்பினார்கள்.  தற்போது ஐதராபாத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இணைய தளத்தில் வெளியான விளம்பரத்தை பார்த்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் உள்ள யோகா மையத்திற்கு யோகா கற்க சென்றுள்ளனர். மையத்தை நடத்தும் உஷாஸ்ரீநம்பி(42) அவரது நண்பர் ஸ்ரீகாந்த் ரெட்டி (46) ஆகியோர் அவர்களுக்கு யோகா கற்றுக் கொடுத்தனர்.

அவர்களிடம் அதிக அளவில் பணம் உள்ளதை தெரிந்து கொண்ட யோகா மாஸ்டர்கள் பணம் பறிக்க திட்டமிட்டனர். ஆழ்நிலை தியான யோகா பயிற்சி எனும் பெயரில் இவர்களிடம் விதவிதமான போதை பொருட்களை பயிற்சியாளர்கள் உஷாஸ்ரீநம்பி கொடுத்துள்ளார். ஒரு சில நாட்களில் போதை பொருட்களுக்கு இருவரும் அடிமையாகினர்.

கடந்த 2-ந்தேதி குண்டலினி யோகா கற்றுத்தருவதாக கூறி இரவு தம்பதியினருக்கு போதை மருந்து கொடுத்து அரை மயக்க நிலையில் காரில் தமிழகத்திற்கு கடத்தி வந்தனர். அவர்களிடம் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகளையும் பறித்துக் கொண்டு ஸ்ரீரங்கம் அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் உறவினர்கள் ஜெகதீஷ் கென்டியை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் மயக்க நிலையில் முறையாக பதில் பேசவில்லை. இது தொடர்பாக அவரது உறவினர்கள் கடந்த 5-ந்தேதி ஐதராபாத் மாதாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தெலுங்கானா போலீசார் 3 தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட தம்பதியை தேடி வந்தனர்.

இதனிடையே ஜெகதீஷ் கென்டி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ளதை தெலுங்கானா போலீசார் தெரிந்து கொண்டதை அறிந்த கடத்தல் நபர்கள் அவர்களை அன்று இரவே திருவண்ணாமலையில் உள்ள ஒரு மடத்திற்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட நபர்கள் வங்கிக் கணக்கில் இருந்து நேற்று முன்தினம் ரூ.2 லட்சத்தை எடுத்ததுடன் போலீசில் புகார் கொடுத்த உறவினர்களுக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்ததுடன் மேலும் பணம் கேட்டுள்ளனர்.

(திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி)

இதையடுத்து தனிப் படை போலீசார் திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னிக்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின் பேரில் ஏ.எஸ்.பி. ரவளி பிரியா தலைமையில் போலீசார் மடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது திருவூடல் தெருவில் உள்ள ஒரு மடம் முன்பு தெலுங்கானா பதிவு எண் கொண்ட கார் உள்ளதை கண்டு உள்ளே சென்ற போலீசார் அங்கு அரை மயக்க நிலையில் இருந்த தம்பதியினரை மீட்டனர். தப்பி ஓடிய உஷாஸ்ரீநம்பி, ஸ்ரீகாந்த் ரெட்டியை போலீசார் மடக்கி பிடித்தனர். கிழக்கு

போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பணத்திற்காக தம்பதியினரை கடத்தியது தெரியவந்தது. இது பற்றி தெலுங்கானா போலீசார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட யோகா மாஸ்டர்கள் ஸ்ரீகாந்த்ரெட்டி மற்றும் உஷாஸ்ரீநம்பியை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன் படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருட்கள், 2 செல்போன்கள், நகைகள், டெபிட் கார்டு, கிரடிட் கார்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தெலுங்கானா மாநில போலீசார் மற்றும் கிரண்கென்டி உறவினர்கள் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தனர்.

மீட்கப்பட்ட ஐ.டி. தம்பதியரையும், கைது செய்யப்பட்ட போலி யோகா பயிற்சியாளர் மற்றும் அவரது நண்பரையும் தெலுங்கானா போலீசாரிடம் திருவண்ணாமலை போலீசார் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் யோகா பயிற்சியாளர்கள் போலி யோகா மையம் நடத்தியதும், வசதியானர்களை போதைக்கு அடிமையாக்கி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததும் தெரியவந்தது. மேலும் போதையில் இருக்கும்போது நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தும் வந்துள்ளனர்.

கிரண் கென்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் ஆபாச வீடியோ படம் எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யோகா எனும் பெயரில் தம்பதிகளை கடத்தி போதை பொருள், ஆபாசப்படம் என பல தொல்லைகள் கொடுத்த கும்பலை கைது செய்து தம்பதிகளை மீட்ட  திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னியை பாராட்டுவோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*