புதுச்சேரியின் வளர்ச்சியை குறைக்க சிலர் முயல்கிறார்கள் : நாராயணசாமி

புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் எனவும், புதுச்சேரியின் வளர்ச்சியை குறைக்க சிலர் முயல்கிறார்கள் என்றும் புதுவை மாநில முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அரசின் சிபாரிசு இல்லாமலேயே புதுச்சேரியின் பாஜக நிர்வாகிகளான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பரிந்துரைத்தார். இதனையடுத்து மத்திய அரசும் அவர்களை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்தது. அவர்களுக்கு ஆளுநர் கிரண்பேடி ரகசியமாக தனது அலுவலகத்தில் வைத்து  பதவி பிரமாணம் செய்து வைத்தார். சபாநாயகர் இருக்கும்போது, ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்ததும், பாஜகவை சேர்ந்தவர்களையே எம்.எல்.ஏக்களாக கிரண்பேடி நியமித்ததும் புதுச்சேரி அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. கிரண்பேடியின் இந்நடவடிக்கையை கண்டித்து நேற்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ், திமுக, விசிக, போன்ற கட்சிகள் தங்களது முழு ஆதரவை அளித்தன. மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னால் ஆள முடியாத மாநிலங்களில் தனது ஆதரவாளர்களை ஆளுநர்களாக நியமித்து அவர்களை கொண்டு ஆட்சிக்குள் தலையிடுகிறதென்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரியின் வளர்ச்சியைக் குறைக்க சிலர் முயன்று வருகிறார்கள். முதலமைச்சர் நாற்காலியில் அமர முயற்சி செய்த என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் எத்தனைபேர் உள்ளனர். புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில், சட்டத்தை மீறியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மூன்று பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வலிமையுடன் உள்ளது என்று கூறினார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*