எடப்பாடி பழனிசாமி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஹைகோர்ட் கேள்வி

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்தது தொடர்பான புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வென்ற தொகுதியான சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான புகார்கள் வந்ததை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், கீதா லட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.  சோதனையில் சிக்கிய ஆதாரங்களில் பல்வேறு அமைச்சர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது. அமைச்சர்கள் பெயர் மட்டுமின்றி தமிழக மாநிலத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் விதமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இதுகுறித்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில் வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆர்.கே.நகர் பணம் பட்டுவாடா விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பணம் பட்டுவாடா விவாகரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே பரிந்துரைத்ததாக கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வைரக்கண்ணன் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்தது தொடர்பான புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். ஆர்.கே நகர் தொகுதியில் பணம் கொடுத்த வழக்கில் முன்னேற்றம் என்ன? என்றும் நீதிபதிகள் கேள்வியை எழுப்பினர். மேலும் வருமான வரித்துறை அறிக்கையில் குறிப்பிட்டோர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான வழக்கை கண்காணித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 23-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*