’ஜெ’ மரண வழக்கு: ஒத்திவைப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த மனுவை விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிடகோரிய வழக்கை ஜூலை 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிருந்தே அவரது உடல்நிலை குறித்த விபரங்கள் ஏதும் முறையாக வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தது. இதனால் மக்களுக்கு பல்வேறு குழப்பங்கள் எழுந்தது. மேலும் அவர் மரணமடைந்ததும் விளக்கமளித்த அப்போலோ நிர்வாகம் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசி டிவி கேமரா ஏதும் வைக்கப்படவில்லை என்று கூறினர். இது அனைவரிடத்திலும் மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இதனால் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதற்குரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்றும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் எனவும் கடந்த மே 22-ஆம் தேதி செல்வ விநாயகம் என்ற வழக்கறிஞர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்மனு அளித்தார். அந்த மனுவில் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிக‌லா, மு‌தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் முன்னாள் முத‌லமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் எ‌ன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செல்வ விநாயகத்தின் இந்த புகாரை காவல் துறையினர் ஏற்காததை அடுத்து அ‌வர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். அதில் த‌னது புகாரை பதிவு ‌செய்து விசாரணை செய்ய தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிடுமாறு கோரினார். இதுகுறித்த வழக்கு சைதாபேட்டை நீதிமன்ற நீதிபதி மோகனா முன்பு விசார‌ணைக்கு வந்தது. அப்போது காவல் நிலையத்தில் யாரொருவர் புகார் தொடுத்தாலும் அதனை பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்‌றம் உத்தரவிட்டிருப்பதால் வழக்கை பதிவு செய்ய உத்தரவிடுமாறு மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*