ஓவியர் வீரசந்தானம் மறைவு: அஞ்சலிகள்!

தமிழ் சமூகத்தின் தனிப்பெரும் ஆளுமையாக விளங்கிய ஓவியர்  வீரசந்தானம் உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார்.  அவரது இழப்பு அறிவுலகினரையும், தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களையும், முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் பிரபலங்கள் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.
ஞாநி சங்கரன் (பத்திரிகையாளர்)
அஞ்சலி. கலைஞர் வீர சந்தானம். எப்போதுமே உற்சாகம் ததும்ப விளிக்கும் குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது. சமுகத்துக்காக கலை என்பதில் இறுதி வரை உறுதியாக நின்றவர். நவீன கோட்டொவியத்தில் சமூக அவலங்களை அவர்தான் முதலில் வடித்தவர். நடிகராகவும் அவர் பங்களிப்பை பாலுமகேந்திராவின் சந்தியா ராகத்திலும் பெரியார் பற்றிய என் அய்யா தொலைக்காட்சி படத்திலும் காணலாம்.

 

#
சி.மகேந்திரன் ,  (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
ஒரு குளிர் நிறைந்த காலையில் 1980 ஆண்டில் சென்னை தேனாம்பேட்டையில் எனது தோழர். சந்தானம் அவர்களை சந்தித்தது, அப்படியே பத்திரமாக என் மனபதிவுகளில் இருக்கிறது. ஆனால் நம் தோழர் நம்மை விட்டு பிரிந்து விட்டார்.
அன்றைய நாட்களில் சிறந்த அட்டைப் படங்களுடன் நூல்கள் வெளியிடுவதில் சிரமம் இருந்தது. பணம் செலவு தான் காரணம். அதை உடைத்தெறிந்த ஓவிய போராளிகள் தான் , ஆதிமூலம்,சந்தானம், டிராஸ்கி மருது ஆகயோர். இதிலிருந்து அடுத்த தலைமுறையும் தோன்றியது.
தன்னானே பாடல்கள் தோழர் கே.ஏ.குணசேகரன் ஒருங்கிணைப்பில் 1986 வெளிட்டோம். அதற்கான பாறை அடிக்கும் உருவத்தோடு படம் வரைந்து கொடுத்தார். அனைத்திந்திய இளைஞர் மன்றத்தின் மாநில செயலாளரராக இருந்த போது தமிழகத்தை பாலைவனமாக்காதே என்ற போராட்டத்தை தொடங்கினோம். அதற்கு சுவரொட்டியும், புத்தக அட்டையும் சந்தானம் வரைந்து கொடுத்தார். அவரது நினைவாக அவர் 1987 ல் வரைந்த அந்த அட்டைப் படத்தை பதிவு செய்கிறேன்.
#

இந்திரன் (கலை இலக்கிய விமர்சகர்)
தமிழ் அழகியலை சுவாசித்த சமூகக் கலைஞன் வீர.சந்தானம் மறைவு
ஓவியர் மற்றும் நடிகர் வீர சந்தானம் ஜூலை 13 வியாழன் மாலை காலமானார்.கும்பகோணத்தில் பிறந்து உப்பிலியப்பன் கோயில் பிரகாரங்களின் சிற்ப எழிலையெல்லாம் அனுபவித்து வளர்ந்து, கும்பகோணம், சென்னை ஓவியக்கல்லூரிகளில் ஓவியம் பயின்று, தமிழ் அடையாளம் கொண்ட தன் ஓவியங்களாலும், சித்திரங்களாலும் இதயம் கவர்ந்து, ஈழத்துத் தமிழர்களின் இனப்படுகொலையை எதிர்த்து வண்ண ஓவியங்களால் குரல் எழுப்பி, சூழலியல் சீர்கேடுகளைத் தன் ஓவியங்களால் சுட்டிக் காட்டி, தமிழ் சினிமாவின் நடிகனாக புதிய பரிமாணம் காட்டி மனசாட்சியுள்ள ஓவியனாக வாழ்ந்த வீர.சந்தானம் நம்மிடையே இன்று இல்லை எனும்போது மனம் பேதலிக்கிறது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*