சசிகலா விவகாரத்தில் எனக்கு எந்த லாபமும் இல்லை : டிஐஜி ரூபா

பரப்பன அக்ரஹார சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்ததற்காக, என்னை பழிவாங்கும் முயற்சியில் டிஜிபி சத்தியநாராயணா குற்றம்சாட்டி வருவதாகவும், என் மீது தவறு இருந்தால் எந்த விசாரணைக்கும் தயார் என்றும் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும், அவருக்கு சமைத்து தருவதற்காக சில கைதிகள் நியமிக்கப்பட்டதாகவும் கர்நாடகா சிறைத் துறை டிஐஜி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்தார். மேலும் இவ்வாறு சிறப்பு சலுகைகள் சசிகலாவுக்கு வழங்குவதற்கு சிறைத் துறை டிஜிபி சத்யநாராயணா சசிகலா தரப்பிடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் பகிரங்க குற்றச்சாட்டினை முன்வைத்தார். இதுகுறித்து டிஜிபி சத்யநாராயணா விளக்கமளிக்க வேண்டுமென்றும் அவர் அறிக்கை ஒன்றை அனுப்பினார். ஆனால் டிஜிபி சத்யநாராயணா செய்தியாளர்களை சந்தித்து, மொத்தமாக சமைக்கப்படும் சிறை உணவில் சசிகலாவுக்கு  விஷத்தை கலந்து வழங்கி விட வாய்ப்பிருப்பதால், சிறை உணவையே அவருக்குத் தனியாக தயாரித்து வழங்கினோம். பாதுகாப்புக்காகவே இதை செய்தோம். நீதிமன்றம் காட்டிய வழியை நாங்கள் பின்பற்றினோம். ரூபா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். விளக்கம் கேட்டு ‘மெமோ ‘ அனுப்பியுள்ளேன் என்று கூறினார். அவர் மறுப்பு தெரிவித்த சிறிது நேரத்திலேயே செய்தியாளர்களை சந்தித்த ரூபா தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக கூறினார். ரூபாவின் குற்றச்சாட்டு குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா உயர் மட்டக்குழு அமைத்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், டிஐஜி ரூபா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது குறித்த அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன். இந்த குற்றச்சாட்டு விவகாரத்தில் எனக்கு எந்த லாபமும் இல்லை இந்த பிரச்னையில் என் மீது குறி வைப்பது நியாயமில்லை. பழிவாங்கும் நோக்கில் என் மீது சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா பேட்டி அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் எந்த கவலையும் இல்லை. சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்ததற்காக என்னை பழிவாங்கும் முயற்சியாக இது நடக்கிறது. என் மீது தவறு இருந்தால் எந்த விசாரணைக்கும் தயார் என்று டிஐஜி ரூபா பேசினார். இதற்கிடையே சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவது தொடர்பாக ரூபாவுக்கு ஜெயிலர் ஒருவர் மொட்டை கடிதம் எழுதியதாகவும் அதனடிப்படையில்தான் ரூபா பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் டிஐஜி ரூபா டிஜிபி சத்யநாராயணாவிடம் இரண்டு முறை மெமோ வாங்கியுள்ளதாகவும் அதனால் அவரை பழிவாங்கவே ரூபா இவ்வாறான குற்றச்சாட்டினை முன்வைக்கிறார் என்றும் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதலமைச்சர் இப்பிரச்சனை குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள போது டிஐஜி ரூபா செய்தியாளர்களை சந்தித்தது குறித்து மாநில அரசு சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. .

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*