சமூக நலத்திட்டங்களை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு?

Indian Finance Minister Arun Jaitley delivers remarks at the Peterson Institute for International Economics April 16, 2015, in Washington, DC. AFP PHOTO/PAUL J. RICHARDS (Photo credit should read PAUL J. RICHARDS/AFP/Getty Images)

அரசு என்பதே முதலீடு என்ற பெயரில் நாட்டை தனியாருக்கு தாரை வார்ப்பதுதான் என்றாகி விட்டது. 91 -ஆம் ஆண்டு துவங்கி இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. லாபத்தில் இயங்கும் அரசுத்துறை நிறுவனங்களையும், கட்டமைப்பு வசதி கொண்ட அரசு நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்த்து அதிலிருந்து ஒரு பங்கு கமிஷன் மட்டும் பெற்றுக் கொள்வதே திறந்த சந்தை பொருளாதாரமாக மாறி விட்டது. இப்படி வருவாய் ஈட்டும் மொத்த நிறுவனங்களையும் தனியாருக்குக் கொடுத்து விட்டு குடிமக்களுக்கான சமூக நலத்திட்டங்களை செயல் படுத்த உலக நாடுகளிடமும் உலக வங்கியிடமும் கையேந்தி கடன் பெறுவதுதான் இன்றைய இந்திய அரசின் நிலை.
கடன் கொடுக்கும் நாடுகள் மக்களுக்கு வழங்கும் மானியங்களை குறைக்கவும், வெட்டவும் உத்தரவு போடும் போது மக்கள் ஒவ்வொரு உரிமையாக இழந்து விடுவார்கள். சமையல் எரிவாயு துவங்கி அப்படி இழந்த மானியங்கள் ஏராளம். இன்னொரு பக்கம் வரி மேல் வரி போட்டு அதில் தனியார்கள் கொழுத்து வளரும் கட்டுப்பாடுகளும் உண்டு. இன்றைய இந்தியாவில் தனியார் தாராள மயத்தின் முதிர்ந்த நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில், லாபத்தில் 2 சதவீதத்தை சமூக நலத்திட்டங்களுக்கு செலவு செய்யுமாறு நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனியார் பெரு நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
“முதல் முறையாக மின்சார பல்பையும், கழிவறையையும் கண்டுள்ள கிராமங்கள் உள்ளன. நாங்கள் அனைத்து கிராமங்களுக்கும் 2018 ஆம் ஆண்டிற்குள் மின்சாரத்தை கொடுக்க இலக்கிட்டுள்ளோம். நான் அனைத்து தொழில் நிறுவனங்களையும் தங்களது இலாபத்தில் 2 சதவீதத்தை சமூகப் பணிகளுக்கு செலவழிக்க வேண்டுகிறேன்” என்றார்.
தனியார் நிறுவன விழாவில் பங்கேற்று பேசும் போதுதான் இந்தக் கோரிக்கையும் வைத்தார். பெரு நிறுவன முதலாளியான மிட்டல் குடும்பம் கட்டிக் கொடுத்த கழிவறைகளின் தொடர்ச்சியாகவே இக்கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சரி ஒரு அரசின் வேலைதான் என்ன என்பதுதான் பாமர இந்தியனின் கேள்வி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*