ஆளுநருக்கு தடை ஏற்படுத்த வேண்டாம் : நாராயணசாமியின் திடீர் மனமாற்றம்!

ஆளுநர் கிரண்பேடி செல்லும் இடத்தில் யாரும் தடை ஏற்படுட்த்த வேண்டாம் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றதிலிருந்து புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் அதிகளவில் தலையிட்டு வருவதாக முதல்வர் நாராயணசாமியால் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. கிரண்பேடியும் அவ்வாறே செயல்பட்டு வந்தார். இதனால் கிரண்பேடிக்கும் புதுச்சேரி அரசுக்கும் மோதல் போக்கு நிலவிவந்தது. இதன் உச்சக்கட்டமாக புதுச்சேரி அரசின் சிபாரிசு இல்லாமலேயே பாஜக கட்சியின் பிரமுகர்கள் மூன்று பேரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்தார் கிரண்பேடி. ஆனால் அவர்களை எம்.எல்.ஏக்களாக ஏற்க புதுச்சேரி அரசு மறுத்துவிட்டது. இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கிரண்பேடி எம்.எல்.ஏக்களிடம் ஏதும் கூறாமல் தொகுதிக்கு சென்று தீடிரென்று ஆய்வுகளை நடத்தி வந்தார். இதனை தடுக்கும்விதமாக, கிரண்பேடி எவ்வித அறிவிப்புமின்றி தொகுதிக்குள் வந்தால் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் அவரை அனுமதிக்க கூடாது என்று சமீபத்தில் முதலமைச்சர் நாராயணசாமி சட்ட சபையில் அறிவித்தார். அது போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பிச்சைவீரன்பேட் ஆசிரியர் குடியிருப்பில் தூய்மை பணியை  ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்ய சென்றார்.  இதனை அறிந்த தொகுதி எம்.எல்.ஏ.வான எம்.என்.ஆர். பாலன் சம்பவ இடத்துக்கு வந்து கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். கடந்த 15-ஆம் தேதி ஆளுநர் கிரண்பேடி ஊசுட்டேரியில் ஆய்வு செய்து விட்டு வழுதாவூர் சாலையில் சைக்கிளில் ராஜ்நிவாஸ் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது காமராஜர் பிறந்த நாளை கொண்டாட திரண்டு இருந்த காங்கிரசார் கவர்னர் கிரண்பேடியை கண்டதும் அவருக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில்,  கிரண்பேடி செல்லும் இடங்களில் யாரும் இடையூறு செய்ய வேண்டாம் என முதலமைச்சர் நாராயணசாமி திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகியான கவர்னர் கிரண்பேடி நேற்றைய தினம் ஊசுடு ஏரி பகுதிக்கு சென்ற போது அவரை எதிர்த்து ஒரு சிலர் கோ‌ஷம் போட்டதாக செய்திகள் வெளியானது. புதுச்சேரியை பொறுத்த வரை மாநில மக்கள் அமைதியை விரும்பு கிறவர்கள். கண்ணியத்தை கடைபிடிப்பவர்கள். மாநில நிர்வாகி என்ற முறையில் கவர்னருக்கு புதுவையில் பல பகுதிகளுக்கு செல்ல உரிமை உண்டு. அதே போல் அமைச்சர்களும், நானும், எம்.எல். ஏ.க்களும் புதுவையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருகிறோம். நாள் தோறும் மக்களையும் சந்தித்து வருகிறோம். நிர்வாக ரீதியாக மாநில அரசின் உரிமைகளில் கை வைத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதே வேளையில் மாநில நிர்வாகி ஒரு பகுதிக்கு செல்லும் போது ஆட்சேபம் தெரிவிப்பது புதுவை பாரம்பரியத்துக்கு ஏற்புடையது அல்ல. ஆகவே, நான் பொதுமக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் வேண்டி விரும்பி கேட்டு கொள்வது என்ன வென்றால் யாரும் கவர்னர் செல்லும் போது அவருக்கு தடை ஏற்படுத்த வேண்டாம். அது நம்முடைய நாகரீகத்துக்கு ஏற்புடையது அல்ல. என்று பேசினார்.

நாராயணசாமியின் இந்த மனமாற்றம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவால் ஏதேனும் நாராயணசாமிக்கு நெருக்கடி அளிக்கப்பட்டிருக்கிறதா அதனால்தான் முதல்வர் நாராயணசாமி இவ்வாறு திடீரென்று மனமாற்றம் அடைந்திருக்கிறாரா என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் புதுச்சேரி அரசுக்கும் கிரண்பேடிக்கும் நடந்து வரும் மோதலில் இந்த விஷயத்தில் கிரண்பேடி வென்றுவிட்டார் என்ற கருத்தும் அனைவராலும் வைக்கப்பட்டு வருகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*