கிராமத்தை விட்டு வெளியேறுவோம் : கதிராமங்கலம் மக்கள்

கதிராமங்கலத்தில் இருந்து காவல்துறையினர் வெளியேறாவிட்டால் நாங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுவோம் என்று கதிராமங்கலம் மக்கள் அறிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம்  கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வந்தததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 30-ஆம் தேதி குழாயில் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிந்தது. மேலும் திடீரென தீயும் பற்றியது. இதனால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தை கலவரமாக மாற்றி மக்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் போராட்டம் நடத்திய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை இன்னும் விடுவிக்காமல் இருக்கிறது நீதிமன்றம். இதற்கிடையே கைதான 10 பேரும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரை விடுவிக்க வேண்டும் எனக் கோரி கதிராமங்கலம் அய்யனார் கோயில் பகுதியில் பொதுமக்கள் தினமும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கதிராமங்கலம் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காத்திருப்பு போராட்டத்தில் கிராம மக்களுடன் அந்த ஊர் பள்ளி, கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் கூறுகையில், கதிராமங்கலத்தில் போராடும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து செல்கின்றனர். அவர்களை வரவிடாமல் தடுக்கும் விதமாக கதிராமங்கலம் கிராம எல்லைகளான திருக்கோடிக் காவல், சிவராமபுரம், கொடியாலம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஊருக்குள் மக்களின் நடமாட்டத்தை உளவுத்துறை காவல்துறையினர் கண்காணித்து அரசுக்கு தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர். எனவே, கதிராமங்கலத்தில் முகாமிட்டுள்ள காவல்துறையினர் அனைவரும் ஊரை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால், கிராம மக்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறும் நிலை உருவாகும் என்றனர்.

தங்களது வாழ்வாதாரத்தை காப்பதற்காக கதிராமங்கலம் மக்கள் போராடி வருகின்றனர். தமிழக அரசு முதலில் அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது, பிறகு அவர்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும் அவர்கள் மீது பழிபோடும் விதமாகவும், பொது மக்கள்தான் காவல்துறையினர் மீது கல்லெறிந்தனர் அதனால்தான் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அந்த கிராம மக்களை தங்களது சொந்த கிராமத்தினை விட்டு வெளியேறும் அவல நிலைக்கு தள்ளியிருக்கிறது தமிழக அரசு. அந்த கிராம மக்களின் கோரிக்கைகளை ஏற்று ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுப்பதற்கு தடை விதித்து ஓஎன்ஜிசியையும், அங்கு முகாமிட்டு மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் காவல்துறையினரையும் உடனடியாக கதிராமங்கலத்திலிருந்து வெளியேற தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*