சிறுகதை : முகூர்த்த நாள்

வெளியூர்களில் தங்கி வேலை பார்த்துக் கொண்டும் படித்துக் கொண்டும்… மூன்று வேலை ஒழுங்காக சாப்பிட முடியாமல் சில நாட்கள் சாப்பிடாமலேயே கூட வாழ்க்கையை ஓட்டிவரும் நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு இக்கதை சமர்ப்பணம்….

வடபழனியில் 100அடி ரோட்டில் ஆஜானுபாகுவாக நின்றிருந்த அந்த பெரிய ஹோட்டலில் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த வரவேற்பு அறை. வண்ணவண்ண விளக்குகள், அறைமுழுக்க ஏசி 28°Cல் இருக்கும் என நினைக்கிறேன்.

மணமக்களுக்கு நல்ல கதகதப்பாக இருக்கும் கோட்சூட்டும் பட்டுப்புடவையும் அணிந்து சன் கன் லைட்டின் வெளிச்சத்தில் நிற்பதால். 90களின் பாடல்கள் கரோக்கியில் கசிந்துருகிக் கொண்டிருக்க அப்பொழுது தான் அவன் உள்ளே நுழைந்தான். வெள்ளையும் வான்நீலமும் கலந்த முழுக்கைச்சட்டை. கைகள் மடித்துவிடப் பட்டிருந்தது. அதற்கு எடுப்பாக அடர்நீல ஜீன்ஸ், அழகான காலணிகள். 22வயது இருக்கும்,  மாப்பிள்ளையின் தம்பியின் நட்புவட்டம் போலக் காணப்பட்டது.

உள்ளே நுழைந்ததும் வரவேற்பில் அமர்ந்திருந்த அழகிய யுவதிகளை கவனிக்காமல் சந்தனத்தை நடுவிரலால் நாசுக்காக எடுத்து நெற்றியின் நடுவில் கிடைமட்டமாகவும் அதேசமயம் அழகாகவும் கீறிவிட்டான். விரலில் மீதம் ஒட்டியிருந்த சந்தனத்தை உள்ளங்கைகளில் தேய்த்துக்கொண்டு வெல்வட்துணியால் மூடப்பட்டு உள்ளே பஞ்சுவைத்து தைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் சற்று பின்புறமாக சென்று அமர்ந்தான்.

உறவினர்கள் பெரும்பாலும் அழைக்கப்படவில்லை. ஆண்வீட்டார், பெண்வீட்டார், முக்கிய உறவினர்கள், அலுவலகத்தில் பணிபுரிவோர்கள், கல்லூரி மற்றும் பள்ளிக்கால முக்கிய நண்பர்கள் மொத்தமே 300 பேர்தான் இருக்கும்…

சிறிதுநேரம் மணமக்களை பார்த்திருந்து விட்டு தனது செல்போனில் அவர்களை ஒரு படம் எடுத்தான். பின்னர் தான் அழகாக இருக்கிறோமா எனப் பார்ப்பதற்காக ஒரு செல்பியை கிளிக்கி பார்த்துக்கொண்டான்.

20நிமிடங்கள் ஓடியிருக்கும். பசி வயிற்றைக் கிள்ளியது. எழுந்து உணவு உண்பதற்காக டைனிங் ஹாலுக்காகச் சென்றான்.

பஃபே சிஸ்டம். நம் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டுப்படி உட்காரவைத்து உணவு பரிமாறப்படவில்லை. தட்டுகள் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன. அருகே டிஸ்யூ எனப்படும் துடைப்புக் காகிதங்கள் வைக்கப்பட்டிருந்தன. தட்டு ஒன்றையும் துடைப்புக் காகிதம் இரண்டையும் எடுத்துக் கொண்டு வரிசையில் நின்றான். ஏறக்குறைய  30விதமான உணவுகள் பட்டர்நாண், தோசை, பன்னீர் பட்டர் மசாலா, காளான் பட்டாணி குருமா, சாம்பார், சட்னி, சோறு, காரக்குழம்பு, பொறியல், ரசம், மோர், தயிர், அப்பளம், மேக்ரோனி, தயிர்வடை, பழக்கூட்டு, காய்கறிகூட்டு இன்னும் பெயர் தெரியாத சில உணவுவகைகளும் அடங்கியிருந்தன.

சுயமாக பரிமாறிக் கொண்டு டைனிங்ஹாலில் பிடித்த இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டு உண்ணலாம். சிலர் நின்றுகொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

தண்ணீரை மட்டும் ஹோட்டல் தொழிலாளிகள் சப்ளை செய்து கொண்டிருந்தனர். பிடித்தமான உணவுப்பண்டங்களை முதலில் தின்று தீர்த்தான். வயிற்றுப் பசி சற்று அடங்கியது,

பின்னர் புதிதாக அதேசமயம் சாப்பிடாத உணவுப் பண்டங்களை சுவைத்துப் பார்த்தான். வயிறு ஆரவாரத்தை நீக்கி அமைதியானது. பின்னர் டிஸ்யூவில் கை துடைத்துக் கொண்டு சாப்பிட்ட தட்டினை சேர்க்கவேண்டிய பிளாஸ்டிக் டப்பியில் சேர்த்தான்.  அதில் நிறைய உணவுப் பொருள்கள் சாப்பிடமால் வீணடிக்கப்பட்டு தூக்கியெறியப் பட்டிருந்தன.

பின்னர் ரெஸ்ட் ரூம் சென்று கைகழுவிக் கொண்டு ஏர் ட்ரையரில் கைகளை உலர்த்திக் கொண்டு ஒரு டிஸ்யூவை உருவி கைகளை துடைத்துவிட்டு வெளியேவந்தான். கிண்ணங்களும் அதனருகே ஸ்பூன்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. தனக்காக ஒரு கிண்ணத்தையும் ஒரு ஸ்பூனையும் எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றான். ஒரு கரண்டி வெண்ணிலா ஐஸ்கிரீமும் இரு குலோப்ஜாமூன்களும் வழங்கப்பட சுவைத்துவிட்டு கிண்ணத்தை அதனை சேர்க்க வேண்டிய டப்பியில் சேர்த்தான். ஹோட்டல் சர்வர் தண்ணீர் கொண்டு வந்தார். தண்ணீரை சற்று உறிஞ்சிவிட்டு வெளியேற கதவை நோக்கி நடந்தான்.

கதவிற்கு அருகே வரவேற்பிற்கு வந்த அனைவருக்கும் நினைவுப்பொருள்கள் ஒருத்தருக்கு ஒன்று என வழங்கிக் கொண்டிருந்தார் ஒருவர். தனக்கான ஒரு பையை பெற்றுக்கொண்டு வெளியேறி சாலையில் நடந்துகொண்டிருந்தான் ஏதோ சிந்தித்தவாறு.

தன் இருப்பிடத்தை அடைந்ததும் தான் உடுத்தியிருந்ததும் அதேசமயம் தன்னிடமுள்ள உயர்ரகம் போல காட்சியளிக்கக்கூடியதுமான அந்த ஒரே உடையை களைந்து அழகாக மடித்து வைத்துவிட்டு அயர்ந்துபடுத்தான்.

அடுத்தநாள் காலையில் 7மணிக்கு எழுந்து வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். 8மணிக்கெல்லாம் வேலைக்குச் செல்ல வேண்டும். சாயங்காலம் 5மணிக்கு வேலை முடிந்த கையோடு மாலைநேரக் கல்லூரி 6முதல் 8.30 மணிவரை. மாசக்கடைசி வேறு. கையில் சுத்தமாக காசில்லை.

கிளம்புவதற்கு முன் நாள்காட்டியைப் பார்த்தான்.மனம் ஆறுதல் அடைந்தது.

ஏனெனில் அன்றும் முகூர்த்த நாள். அவனது பசியைப் போக்க இன்றும் பலமண்டபங்கள் காத்திருக்கின்றன. ஆனால் அவற்றில் எந்த ஒரு மண்டபத்திற்கு அவன் செல்வானோ?!

அழையா விருந்தாளியான அவனுக்கு மட்டுமே வெளிச்சம்…!!

-மனோ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*