கடைத் தெருவுக்கு சென்று வர சசிகலா என்ன பூந்தி விக்கிற சாந்தியா?

தவறு செய்யும் ஒரு மனிதன் தன் தவறுகளை உணர்ந்து மீண்டும் இச்சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக திரும்பி வர வேண்டும் என்பதே சிறை தண்டனையின் நோக்கம். ஆனால் இந்தியாவில் உள்ள எந்த சிறையில் அடைபடும் ஒரு நபர் தன் தண்டனைக்காலம் முடிந்து வெளியில் வரும் போது முழு கிரிமினலாகவோ, அல்லது மன நோயாளிகளாகவோதான் வெளி வர முடியும். இந்திய சிறைகள் மிக மோசமான மனித அவலங்கள் நிரம்பிய கொட்டடிகள். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறை செல்லும் யாவருமே இரும்புக் கிராதிகளுக்குள் அகப்படும் போது அவர் துண்டிகப்பட்ட நபராகி விடுகிறார். ஆனால் இது அனைவருக்கும் பொருந்துமா என்பதும். சிறை வசப்படும் அத்தனை நபர்களையும் இந்திய சிறைத்துறை ஒரே மாதிரி நடத்துகிறதா என்பதும்தான் கேள்வி.

இந்தியாவின் பெரும்பாலான சிறைகளில் ஆயிரக்கணக்கான கைதிகளை மனுப்போட்டு பார்க்க எவரும் வரமாட்டார்கள். உரிய விசாரணை இன்றியும், ஜாமீன் இன்றியும் ஆயிரக்கணக்கான ஏழைகள் சிறையிலேயே கிடந்து மடிகிறார்கள். காரணம் வந்து பார்க்க லஞ்சம் கொடுக்கவோ கமிஷன் வெட்டவோ காசு கிடையாது. ஆனால் பணம் இருப்பவர்களுக்கு சிறையில் ஓரளவு வசதிகள் கிடைப்பது உண்மைதான். சில ரூம்களை கேட்டு வாங்குவது உள்ளிட்ட விஷயங்கள் நீண்ட காலமாக சிறையில் உள்ள வழக்கமான நடைமுறைதான். அது போல டெலிவிஷன் பெட்டி வைத்துக் கொள்வது உள்ளிட்டவையும் அப்படித்தான். ஆனால் இந்த சிறை சலுகைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்ட சிறை சலுகை ஒன்று உண்டு. அது காஞ்சி மகா பெரியவா சங்கர்ராமன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த போது பெரியவா மலம் கழிக்க வாழை இலை வாங்கி வந்து அதில் மலம் கழிக்க வைத்ததோடு அதை அப்புறப்படுத்தவும் செய்தார்கள் சிறை ஊழியர்கள். இந்த சலுகையை எந்த சிறை விதி அனுமதிக்கிறது. மலம் கழிக்க வாழை இலை வாங்கிக் கொடுத்த அந்த சிறை ஊழியரால் ஒரு பொழுதேனும் நிம்மதியாக வாழை இலையில் உணவு உண்டிருக்க முடியுமா?

நிற்க, சசிகலா தொடர்பாக வெளியான இரு வீடியோக்கள் தவிர இன்னும் சில வீடியோக்கள் வெளியாகலாம். இந்த வீடியோக்களை சிறைத்துறை அதிகாரி ரூபா தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொன்னதோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இந்த வீடியோக்களில் சசிகலாவுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டிருப்பது தெரிகிறது. பிளாஸ்க் வைத்துக் கொள்வது, எக்ஸ்ட்ரா போர்வை, தலையணைகள் கொடுத்திருப்பது தெரியவருகிறது. அதிகபட்சம் சசிகலாவுக்கு காட்டிய சலுகைகள் இவ்வளவுதான். ஆனால் சசிகலா ஏதோ சிறையில் இருந்து வெளியில் வந்து பெங்களூரு மலேஸ்வரத்தில் இருக்கும் ஓரியன் ஷாப்பிங் மாலில் பொருட்கள் வாங்கி விட்டு அப்படியே ஒரு சினிமாவும் பார்த்து விட்டு திரும்பியது போல பிரச்சாரம் செய்கிறார்கள். ஏதோ சிறையில் இருக்கும் சுப்பனும், குப்பனும் வெளியில் வந்து செல்வது போல சசிகலாவும் வந்து செல்ல அவர் என்ன பூந்தி விற்பனை செய்யும் சாந்தியா? தான் குறி வைக்கப்பட்டிருப்பதை அறியாத சசிகலா இப்போதைக்கு தூண்டிலில் சிக்கிய மீன் தான். தூண்டில் வைக்கும் இரை மீனுக்கு உணவாகாது. அப்படிதான் இந்த சிறை சலுகைகளும். அது அவருக்கு இரை அல்ல!

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*