பாவனா வழக்கில் திடீர் திருப்பங்கள்: உயர் நீதிமன்றத்திலும் ஜாமீன் மறுப்பு!

கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்த நடிகை பாவனாவை ஒரு கும்பல் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது. இதுதொடர்பாக பல்சர் சுனி உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் நடிகர் திலீப் கடந்த 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி அவர் அங்கமாலி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட், வரும் 25-ஆம் தேதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர் இப்போது ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் திலீப், நேற்று ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். திலீப்புக்கு ஜாமீன் வழங்கினால், தனது செல்வாக்கினால் வழக்கின் போக்கை மாற்றி விடுவார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். இதனால் உடனடி ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்ததோடு, இந்த வழக்கை வரும் ஜூலை 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

திலீப் சிறையில் அடைக்கப்பட்டு 7 நாட்கள் ஆகின்றன. இந்நிலையில் கேரளா முழுவதும் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருவதால், நடிகர் திலீப்பும் சிறையில் கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருவதாக கேரள ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன. நீதிமன்றம் தொடர்ந்து இவரது ஜாமீன் மனுவை நிராகரித்து வருகிறது. திலீப் வெளியே வந்தால் சாட்சியங்களை அழித்து விடுவார் என கருதியே அவரது ஜாமீன் மனு மறுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையை வேகமாக செய்து வரும் காவல்துறையினருக்கு, பாவனா பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் அடங்கிய மெமரி கார்டு கிடைத்தது. எனினும் அந்த மெமரி கார்ட்டில் அது சம்பந்தமான புகைப்படங்கள் ஏதும் இல்லை என்பதால் அதனை ஆய்வுக்கு அனுப்பவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் பல்சர் சுனிக்கு ஆதரவாக வாதாடிய பிரதீஷ் சக்கோ, பாவனா புகைப்படம் எடுக்கப்பட்ட மொபைலோடு தலைமறைவானார். இந்த மெமரி கார்டை அவரது உதவியாளர் ராஜூ ஜோசப்பிடம் இருந்து போலீசார் பெற்றுள்ளனர். புகைப்படம் எடுக்கப்பட்ட மெமரி கார்ட் மட்டும் கிடைத்துள்ள நிலையில் அதனை பயன்படுத்தி செல்போன் எங்கே என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவங்கள் ஒருபுறம் இருக்க, நடிகர் திலீப்பின் அதிகாரப்பூர்வ வலைதளமான dileeponline.com-ஐ யாரோ ஹேக் செய்து, ‘மலையாள குற்றவாளி திலீப்பின் அதிகாரப்பூர்வ வலைதளம்’ (Official Website of Malayalam Criminal Dileep) என தோன்றும்படி வடிவமைத்துவிட்டனர். தற்போது அந்த வலைதளம் ‘We’ll be back soon! என்ற வாக்கியத்தோடு இயங்காமல் இருக்கிறது. திலீப்பின் எதிர்ப்பாளர்கள்தான் இந்த செயலை செய்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. அவருக்கு கேரள மாநிலத்தில் ஆதரவாளர்களை காட்டிலும் எதிர்ப்பாளர்களே அதிகமாக இருக்கின்றனர். ஜூலை 20-ஆம் தேதிக்கு பிறகுதான் இந்த வழக்கு பற்றிய மேற்படி விவரங்கள் தெரியும்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*