கமலுக்கு ஆதரவாக டிடிவி தினகரன்

நடிகர் கமல் குறித்து கருத்து தெரிவிக்கும் அமைச்சர்கள் கண்ணியத்துடன் பேசினால் இந்த பிரச்னைகள் வராது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை எதிர்த்து பல்வேறு கருத்துக்கள் வைக்கப்பட்டு வந்தன. இதற்கு விளக்கமளிப்பதற்காக செய்தியாளர்களை சந்தித்தபோது நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாக கூறினார். அவர் அந்த கருத்து கூறியதிலிருந்து அவருக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் கமலின் கருத்து குறித்து கேட்டபோது அவர் கமல்ஹாசனை ஒருமையில் தாக்கி பேசினார், அவர் மட்டுமின்றி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நடிகர் கமல்ஹாசனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென்று கூறினார். அமைச்சர்களின் பேச்சுக்களுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை அமைச்சர்கள் பேசியது தவறு என்று வாய் திறக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் பேசியது குறித்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசுகையில், நடிகர் கமல் சிறந்த நடிகர், பண்பாளர். அவர் அரசை பற்றி கருத்து கூறியிருக்கிறார். அது அவரது கருத்து சுதந்திரம், கருத்து உரிமை. இதை யாரும் தடுக்க முடியாது. அவரது கருத்து அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பேசப்பட்டதா, சுய விருப்பு மற்றும் வெறுப்பு ஏற்பட்டு அவர் பேசுகிறாரா என்பதை ஆய்வு செய்ய கூடாது. முதலில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை முழுமையாக கேட்க வேண்டும். அனைத்து துறையிலும் ஊழல் பெருகிவிட்டது என அவர் கூறியுள்ளார். அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்பதை முதலில் கேட்கவேண்டும். அதை விடுத்து அமைச்சர்கள் ஒருமையில் பேசியள்ளனர். அமைச்சர்கள் கண்ணியமாக பேசி இருக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இந்த கட்சியில் நடந்து செல்லும் அமைச்சர்கள், இதுபோன்று ஒருமையில் பேசி இருக்க கூடாது. அப்படி அவர்கள் சரியான முறையில் பேசி இருந்தால், இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டு இருக்காது. என்று கூறினார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தற்போது டிடிவி தினகரனும் ஆதரவினை தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்ததால் அவர்கள் மேல் உள்ள கோபம் டிடிவி தினகரனுக்கு இன்னும் குறையவில்லை என்று தெரிகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*