மாணவி மீது குண்டாஸ் சரி என்கிறார் முதல்வர்!

மாணவி வளர்மதி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததால் அவர் கைது செய்யப்பட்டார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மக்களும், ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கதிராமங்கலம் மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அம்மக்களின் போராட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதைப்போலவே சேலத்தை சேர்ந்த மாணவி  வளர்மதி மற்றும் ஜெயந்தி ஆகியோர் நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்துக்கு ஆதரவாக இயற்கையை காப்போம் என்று துண்டு பிரசுரங்களை அளித்தனர். இதனால் அவர்கள் கடந்த 13-ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வளர்மதி மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. மாணவி என்று கூட பாராமல் அவரது எதிர்கால வாழ்வை குறித்து சிறிதும் யோசிக்காமல் மக்கள் நலனுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததற்கு அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாணவி வளர்மதி மீது ஏற்கனவே 6 வழக்குகள் உள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசியதாக மாணவி மீது வழக்கு உள்ளது. மக்களை தூண்டிவிட்டு கிளர்ச்சியை ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தெரிவித்தார். மேலும் மாணவர்கள் போராடினால் அவர்களின் படிப்பு கெடும் எனவும் எடப்பாடி தெரிவித்தார்.

மாணவி வளர்மதி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக எடப்பாடியார் கூறியுள்ளார். துண்டு பிரசுரங்கள் வழங்கியதால் பொது அமைதிக்கு குந்தகம் வருமா என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை. வளர்மதி மீது ஏற்கனவே 6 வழக்குகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த ஆறு வழக்குகளும் கொலை வழக்கா, கொள்ளை வழக்கா எதுவும் இல்லை அந்த ஆறு வழக்குகளும் மக்கள் நலனுக்காக போராடியதால் வளர்மதி மீது போடப்பட்ட வழக்குகளே ஆகும். மக்களை தூண்டி கிளர்ச்சியை ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் பழனிசாமி அறிவித்திருக்கிறார். மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒரு மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்தும்போது கிளர்ச்சியை தூண்ட தனியாக யாரும் தேவையில்லை கிளர்ச்சி தானாகவே மக்கள் மத்தியில் எழுந்துவிடும் என்பதை எடப்பாடியார் தொடர்ந்து புரிந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். முக்கியமாக மாணவர்கள் போராடினால் அவர்களின் படிப்பு கெடும் என கூறியிருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசுதான் மாணவர்களை போராட வைக்கிறது. கதிராமங்கலத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை போராட்டத்துக்கு இழுத்து வந்தது மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்தியதுதான் காரணம். எனவே மக்களையும், மாணவர்களையும் போராட்டத்துக்கு வலுக்கட்டாயமாக தள்ளுவது இந்த மாநில அரசுதான் என்பதை முதலமைச்சர் புரிந்துகொண்டு செயல்பட வேண்டுமென்பதே பரவலான கருத்தாக இருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*