தோப்பு வெங்கடாசலம் ராஜினாமா : தினகரன் ஆட்டம் ஆரம்பம்!

டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான தோப்பு வெங்கடாசலம் சட்டமன்ற அவைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

டிடிவி தினகரனை கட்சியிலிருந்து முழுமையாக ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூறியதிலிருந்து அதிமுக மூன்று அணிகளாக பிளவுப்பட்டு நிற்கிறது. தன்னை ஒதுக்கிய எடப்பாடி அணியினருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை டிடிவி தினகரன் தன் பக்கம் இழுத்தார். இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பழனிசாமியை சந்தித்து டிடிவி தினகரன் மீண்டும் கட்சி பணியில் ஈடுபட வேண்டும் அதற்கு எவ்வித இடையூறும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். ஆனால் எடப்பாடி பழனிசாமி பெரிதாக அதனை எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே சில சமயங்கள் நடந்து கொண்டனர். மேலும் கூட்டம் தொடங்குவதற்கு முன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இந்த கூட்டத்தொடரில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கலைப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் அவ்வாறு செய்யாததால் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் அடைந்தார்.

இந்நிலையில், டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர்களுள் ஒருவரான எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் இன்று தனது சட்டமன்ற அவைக்குழு உறுப்பினர் பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆட்சி கலைக்கப்படலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஒருவர் சட்டமன்ற அவைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருப்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியளித்திருப்பதாகவும் அவருக்கு நெருக்கடியை கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் டிடிவி தினகரன் தனது எம்.எல்.ஏக்களை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு தினகரனால் இனி பல்வேறு குடைச்சல்கள் காத்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*