யூ ஆர் ஏடட் – அமானுஷ்ய திகில் சிறுகதை

அந்த வாட்ஸ்அப் குரூப்பில் அவன் இணைந்து 5 மணி நேரங்கள் கழிந்திருந்தன. அதில் வந்த குறுந்தகவல்கள் ஒலிக் குறிப்பு மற்றும் ஒலிஒளிக் குறிப்புகள் அனைத்தும் அமானுஷ்யங்கள் நிறைந்தவைகளாக இருந்தன. உலகில் மனிதர்களால் இன்றளவும் கண்டுபிடிக்க முடியாத விஷயங்கள் பலவற்றைப் பற்றிய செய்திகளும் அதில் வந்து கொண்டிருந்தன. பிரபஞ்சம், கருந்துளை, ஏலியன்ஸ், டாவின்சி, ஐன்ஸ்டீன், உயிர்மூலம், இறந்ததன் பின் உயிர்நிலை, ஆத்மா, கனவு, பெர்முடா முக்கோணம் இதுபோன்ற 100க்கும் மேற்பட்ட தகவல்கள் அந்த 5மணி நேரத்தில் மட்டும் வந்து சேர்ந்திருக்கும்.

அடுத்தடுத்த தகவல்கள் வருவதற்காக அந்த குழுவிலுள்ள அலைபேசிஎண்கள் ஒவ்வொன்றும் தட்டச்சு செய்து கொண்டிருப்பதாக காட்டப்பட்டது. சில எண்கள் பத்து இலக்கங்களுடனும், சில பன்னிரெண்டு, சில ஏழு இலக்கங்களாக இருந்தன. உலகத்தில் உள்ள வெவ்வேறு இடங்களிலிருந்து அவர்கள் இயங்கி வருகின்றனர் என்பது அவர்களது அலைபேசி எண்கள் மூலம் அறிய முடிந்தது. மறைந்த, மறைக்கப்பட்ட, மாயமான உண்மைகளை கண்டறியும் ஆர்வத்தோடும், நோக்கத்தோடும் பயணித்த இவர்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் ஒன்றிணைக்கப்பட்டவர்கள் எனத் தெரிந்தது.

12-வயது சிறுவனில் தொடங்கி 80வயது கிழவிவரை வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த பலர் அந்த குழுவில் இருந்தனர். அவ்வளவு பேரும் அந்த முடிவில்லாத தேடலின் பாதையில் ஓடிக் கொண்டிருந்தனர். சிலர் ஆப்பிரிக்கா, சிலர் ஆஸ்திரேலியா, கொரியன், சைனீஸ், ஆசியன்ஸ் என அவரவர் வாட்ஸ்அப் ப்ரொபைல் போட்டோவைப் பார்த்து கண்டறிந்து கொண்டான்.

நேரம் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்க கடிகாரத்தின் முட்கள் இரண்டும் பன்னிரெண்டிடம் சந்தித்து கட்டித்தழுவ மணி ஒலித்தது. அதனைக் கேட்டு தன்னிலை உணர்ந்தான் அவன். இவ்வளவு பெரிய உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் செயல்படுகின்ற குழுவில் என்னை யார் இணைத்தார்கள்?! என் நம்பர் எப்படி அவர்களுக்கு கிடைத்திருக்கும்?! என்றபடி யோசித்துக் கொண்டே குழுவின் விவரங்களில் சென்று பார்த்தான்.. யாருமே அவனை இணைக்கவில்லை. ஆனால் அவன் அந்தக் குழுவின் செயல்பாடுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதில் மற்றவர்களிடம் உரையாட முயற்சித்தான். அதுவும் முடியவில்லை. அவர்களில் ஒவ்வொருவர் நம்பராக எடுத்து வாட்ஸ்அப், கால், மெசேஜ் என அனைத்து வகைகளிலும் முயற்சி செய்து பார்த்தான். தொடர்பு கொள்ள இயலவில்லை. என்னதான் செய்ய ஒவ்வொருவரது ப்ரொபைல் பிக்சரையும் மறுபடியும் பார்த்தான். ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்க்கும் பொழுது தே.ஜ.வு, ஜமாய்வு அவனுக்குள் ஏற்பட்டது. விமானத்தில் பறப்பது போலவும், கனவில் மிதப்பது போலவும், சுழலில் சிக்குவது போலவும், அலைகடலில் மூழ்குவது போலவும் எண்ணற்ற எண்ணங்கள். ஒரு வழியாக கடைசியில் கலங்கிய குட்டையைப் போல் தெளிவில்லாத நிலையில் வந்து நின்றான்.

கடைசியாக அவர்களது நம்பர்கள் மற்றும் ப்ரொபைல் போட்டோக்களை எடுத்து கூகுளில் தேடினான். ஒவ்வொரு தேடலும் ஒரே பக்கத்திலேயே சென்று நின்றன.

‘தி மிஸ்ட்ரீஸ் ஆப் வேர்ல்ட்’…
அதில் அந்த குழுவிலிருந்த ஒவ்வொருவரது புகைப்படங்களும் அவர்களைப் பற்றிய தகவல்களும் இருந்தன. ஒவ்வொருவரும் உலகில் நிகழ்ந்த கண்டறிய இயலாத ஒவ்வொரு நிகழ்வுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர். இருவர் பெர்முடா முக்கோணத்தில் தொலைந்த கப்பலில் சென்றவர்கள். சிலர் காணாமல் போன அந்த மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்கள். சிலர் அந்த காலத்தில் விஞ்ஞானிகளால் தனிப்பட்ட ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தனர். அது மட்டுமல்லாமல் இன்னும் நிறைய நிறைய கண்டறிய இயலா அமானுஷ்ய சம்பவங்களுடன் அவர்கள் ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்டிருந்தனர். அவற்றைப் பற்றி முழுவதுமாக தேடி படித்துக் கொண்டிருந்தான் அவன். இப்படியான தேடலின் சுவாரசியத்தில் மூழ்கிப்போன அவன் உலகில் நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து அமானுஷ்ய விசயங்களைப் பற்றியும் ஆராயத் தொடங்கினான்..

கூகுள் தேடல் பொறியிலும், யூ டியூபிலும் இது போன்ற அசாதாரணமான விஷயங்களைத் தேடித் தேடிப் பார்த்தான். அவற்றில் பெரும்பாலும் கிடைத்ததெல்லாம் உண்மையல்ல என்பதையும் தெரிந்து கொண்டான். உண்மையைத் தேடி அலைய அவன் மனம் எத்தனித்தது. அந்த நிமிடம் பைத்தியம் பிடித்தவனைப் போல உணர்ந்தான்.

அந்த குரூப்பில் வந்த ஒலி மற்றும் ஒலிஒளிக் குறிப்புகளை மீண்டும், மீண்டும் பார்க்கவும், கேட்கவும் செய்தான். எத்தனைமுறை கேட்டாலும், பார்த்தாலும் தெளிவு பிறந்ததாய் தெரியவில்லை. எல்லாம் கேள்விக்குறியிலேயே வந்து முடிந்தது. எனினும் ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்க பேட்டரி லோ சிம்பல் காட்டவும் சற்றே கடுப்புடன் அலைபேசியை சார்ஜரில் கனெக்ட் செய்துவிட்டு படுத்தான்.

தூக்கம் வராது என தெரிந்தும் புரண்டு புரண்டு படுத்தான். பலவாறான எண்ணங்கள் அவன் மனதை குடைந்தெடுத்தது. இந்த சலசலப்புகளுக்கு இடையே எவ்வாறு உறங்கிப் போனான் எனத் தெரியவில்லை.

“தம்பி எழுந்திரு பா!.. மணி பத்தாச்சு பாரு.. எழுந்து பல்லு வெளக்கிட்டு இந்த காபிய குடி” என அவன் அம்மா செல்லமாக சொல்லிவிட்டு அருகில் இருந்த கண்ணாடி மேசை மீது காபி டம்ளரை வைத்துவிட்டு போக, எழுந்து பார்த்துவிட்டு மீண்டும் போர்வையை போர்த்தி படுத்துவிட்டான். முந்தைய நாள் நடந்தவை அனைத்தும் கனவு போலவும் கற்பனை போலவும் இருந்தன. எழுந்திட்டியா குளிச்சிட்டு வந்து சாப்பிடு கண்ணு! என அம்மா மீண்டும் சொன்னாள்.

சிறிது நேரம் கடந்திருக்கும்.
‘சாப்பிடு பா! போதுமா?? வயசு பையன் நிறைய சாப்பிட்றதில்ல!
இந்த இன்னொரு முட்டை வச்சுக்கோ’… என அம்மா சொல்வதையெல்லாம் படுத்துக் கொண்டே கேட்டுகொண்டிருந்தான் அவன். மேலும், அவள் ‘குழம்பு நல்லாருக்காப்பா’ என கேட்க, அம்மா ஏன் தனியாக பேசுகிறாள் என போர்வையை விளக்கியவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவனை போன்றதொரு அவனையொத்த உருவம் ஒன்று இவன் அன்னை ஊட்டிவிடுவதை ரசித்து ருசித்து சாப்பிடுவதை கண்டு வெகுண்டெழுந்தான். அவன் அருகில் சென்று, யாருடா நீ? இங்க என்ன பண்ணற? என கத்தினான். அதுவோ காதில் விழாதது போல, ‘அம்மா இன்னொரு வடை’ என்றது.
இவனோ மேலும் வெறித்தனமாய் ‘அம்மா நா இங்க இருக்கன். அவன் வேற யாரோ! அவனுக்கு எதுக்கும்மா ஊட்டி விடுற?!’ என கையை தட்டிவிடப்போக, அவன் அன்னையின் கையை அவனால் தொட இயலவில்லை. மேலும், அதிர்ந்தவனாய் செய்வதறியாது விழிக்க அவனது அலைபேசியில் நோட்டிபிகேஷன் ரிங்டோன் அழைத்தது.

என்னவென்று அறிய அதனை திறந்து பார்த்த அவன், அதே வாட்ஸ் அப் குரூப்பில்,
“#யூ_ஆர்_ஏடட் (you are added)” என்ற வாக்கியம் காட்டப்பட்டிருந்ததை பார்த்து அதனை க்ளிக்கினான்…

அந்த குரூப்பிலிருந்தவர்கள் அனைவருடமிருந்தும் அவனுக்கு என்ன நடந்தது என்றும் அவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதையும் விளக்கக்கூடிய குறுந்தகவல்கள் இந்நேரம் அவர்களுக்கிடையில் பரிமாறப்பட்டிருக்கும்…

– மனோ & ஹரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*