ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு!

திமுக சார்பில் நடத்தப்படும் முரசொலி நாளிதழ் பவளவிழாவில் பங்கேற்பதற்கு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. அவர் உயிரோடு இருந்த வரை நடிகர்கள் யாரும் அரசியல் குறித்தும் தமிழக அரசு குறித்தும் வாய் திறந்து பேசியதில்லை. ஆனால் அவரது மறைவுக்கு பிறகு நடிகர்கள் தற்போது தீவிரமாக அரசியல் பேசியும், தமிழக அரசை தைரியமாகவும் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த ரஜினி சிஸ்டம் சரியில்லை என்று பேசி பரபரப்பை பற்றவைத்தார். அதற்கு பிறகு தற்போது நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அவரது இந்த பேச்சு தமிழக அமைச்சர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த அவர்கள் நடிகர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடி கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார். நடிகர் கமலுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் தங்களது ஆதரவினை தெரிவித்திருக்கின்றனர். இதனால் கமல் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் என்ற கருத்தையும் அதிமுக அமைச்சர்கள் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில் முரசொலி நாளிதழ் பவள விழா, ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான விழா அழைப்பிதழ், முக்கிய அரசியல் தலைவர்களுக்கு தி.மு.க. சார்பில் அனுப்பப்பட்டுவருகிறது. அதேபோல நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் விழா அமைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. விழாவில் கமல்ஹாசன் பங்கேற்பது உறுதியாகிவிட்டது என்றும் ரஜினிகாந்த் பங்கேற்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் அதிமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் வேளையில் திமுக சார்பில் நடத்தப்படும் விழாவுக்கு கமல் அழைக்கப்பட்டிருப்பதும், அதில் அவர் பங்கேற்பதற்கு ஒத்துக்கொண்டிருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*