உறுதியானது சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள்!

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் அனைத்தும் உண்மைதான் என்று புதிய சிறைத்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக சிறைத் துறை டிஐஜி ரூபா குற்றச்சாட்டினை முன்வைத்தார். ஆனால் அதனை டிஜிபி சத்யநாராயணா ராவ் அதனை மறுத்து வந்தார். இதனைத் தொடர்ந்து சசிக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பான 2 வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே டிஐஜி ரூபா மற்றும் டிஜிபி சத்யநாராயண ராவ் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கர்நாடகா சிறைத்துறையின் புதிய டிஐஜியாக ரேவண்ணா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கர்நாடகா சட்டசபை வளாகத்தில் சட்டசபை பொதுக் கணக்கு குழு கூட்டம் கூட்டப்பட்டது. குழு தலைவர் அசோக் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சிறைத்துறை கூடுதல் டிஜிபி, என்.எஸ் மேக்ரட், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் கர்நாடகா சிறைத்துறையின் டிஐஜி ரேவண்ணா ஆகியோர் ஆஜராகியிருந்தனர். அப்போது அவர்களிடம் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்கள் சசிகலா அறையில் டிவி இருந்தது உண்மை. பார்வையாளர் அறையில் இருந்து 2 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. சசிகலாவுக்கென தனி சமையலறை இருந்ததும் உண்மைதான் என்று கூறினர். இதனையடுத்து ரூபா கூறிய குற்றச்சாட்டுக்கள் உண்மைதான் என உறுதியாகியுள்ளது. சசிக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் உறுதியாகியுள்ளதால் கர்நாடகா அரசுக்கும், சசிகலாவுக்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்திய பிறகு அவர் வேறு சிறைக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*