நாராயணசாமி மீது ஊழல் வழக்கு தொடுப்போம் : பாஜக நியமன எம்.எல்.ஏ

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மீது ஊழல் வழக்கு தொடர மத்திய அரசிடமும், ஆளுநரிடமும் அனுமதி கேட்டு மனு அளிக்கவுள்ளோம் என்று பாஜக நியமன எம்.எல்.ஏ சாமிநாதன் கூறியுள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய கிரண்பேடியை புதுச்சேரி ஆளுநராக நியமித்தது பாஜக. அவர் நியமிக்கப்பட்டதிலிருந்து கிரண்பேடி புதுச்சேரி அரசியலில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார். எம்.எல்.ஏக்களிடம் சொல்லாமல் தொகுதிக்கு செல்வது, அரசின் செயல்பாடுகளில் நேரடியாக அதிகளவில் தலையிடுவது என்று தொடர்ந்து சர்ச்சையான முறையிலேயே நடந்து வந்தார். அதன் உச்சக்கட்டமாக அரசின் சிபாரிசு இல்லாமலேயே பாஜக பிரமுகர்கள் மூன்று பேரை புதுச்சேரியின் நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்தார். இது புதுச்சேரி அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரிக்கு புறவாசல் வழியாக பாஜகவை அழைத்து வந்திருக்கிறார் கிரண்பேடி என்று பலரால் கூறப்பட்டு வருகிறது. மேலும் கிரண்பேடி நியமித்த எம்.எல்.ஏக்களை ஏற்கமுடியாது என்று புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை பாஜகவினர் புதுச்சேரி மாநில சட்டப்பேரவையை முற்றுகையிட முயற்சித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் புதுச்சேரியில் காங்கிரஸின் ஆட்சியை கலைக்க பாஜக முழுமூச்சாக செயல்பட்டு வருவாதகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் புதுவை பாஜக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நியமன எம்.எல்.ஏக்களில் ஒருவரான சாமிநாதன், நியமன எம்.எல்.ஏ.க்களான மத்திய அரசால் நியமிக்கப்பட்ட எங்களை அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளை சந்திக்க கூடாது என்று கூறுவதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணனுக்கு தகுதியில்லை. மத்திய அரசு எங்களை நியமித்துள்ளதால் மக்கள் பிரச்னைக்காக அரசு அலுவலகம் செல்வோம். வேண்டுமானால் எங்கள் மீது வழக்கு தொடரட்டும். முதலமைச்சர் நாராயணசாமி மீது ஊழல் வழக்கு தொடர மத்திய அரசிடமும், கவர்னரிடமும் அனுமதி கேட்டு மனு அளிக்க உள்ளோம். என்று கூறினார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*