பாஜகவின் அடுத்த குறி எடப்பாடி பழனிசாமி?

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நண்பர் தியாகராஜன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

மணல் கான்ட்ராக்ட்டர்கள் சேகர் ரெட்டி, நாமக்கல் சுப்பிரமணியன் ஆகியோரைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் தியாகராஜனும் வருமான வரித்துறையின் வலையில் சிக்கியுள்ளார். தமிழக அரசின் சாலைப்பணி ஒப்பந்ததாரராக தியாகராஜன் செயல்பட்டு வருகிறார். அவருடைய வீடு மற்றும் குருமூர்த்தி என்ஜியரிங் எண்டர்பிரைசஸ், ஜிஜி இன்ஃபிராஸ்டர்க்சர்ஸ், தியாகராஜன் எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை அஷோக் நகர் பகுதியில் இந்த நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த 3 நிறுவனங்களும் தமிழக அரசின் பெரும்பாலான சாலை போடும் பணிகளையும், பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளன.

இந்நிறுவனங்கள் ரூ.20 கோடி மதிப்புள்ள உடைமைகளை ரூ.10 கோடி என்று பதிவு செய்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெடுஞ்சாலைத் துறையில் தியாகராஜன் மிக முக்கிய ஒப்பந்ததாரர் ஆவார். நெடுஞ்சாலைத் துறை கடந்த 6 ஆண்டுகளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றிலிருந்து பல மணி நேரமாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, முழுத் தகவல்கள் தெரியவில்லை.

தமிழகத்தில் வலுவாக காலூன்ற மத்தியில் ஆளும் பாஜக வருமான வரித்துறையை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் வருமான வரித்துறையினரின் செயல்பாடும் இருக்கிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தெளிவாக விளக்கமளிக்கவில்லை வருமானவரித்துறை. அதேபோல் தற்போது தியாகராஜன் வீட்டில் நடந்த சோதனையிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து முழுத் தகவல்களும் இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் எந்நேரமும் ஆட்சி கலைக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது முதல்வர் எடப்பாடியார் கைவசம் இருக்கும் ஒரு துறையின் ஒப்பந்தக்காரரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனையிட்டிருக்கிறது. மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தின் முக்கிய புள்ளி ஒருவர் மீது வருமான வரித்துறையினரின் பார்வை விழுந்திருப்பதாகவும் அவர்தான் மத்திய அரசின் அடுத்த குறி என்ற தகவல்களும் சமீபத்தில் வெளியாகின. தற்போது நடப்பதை பார்த்தால் அந்த முக்கிய புள்ளி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதானோ என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்திருக்கிறது. தியாகராஜன் வீட்டில் நடந்திருக்கும் ரெய்டை வைத்து தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதற்றத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*