பாஜகவை எதிர்க்க நாடு தழுவிய இயக்கம் : மம்தா பானர்ஜி

மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்ப்பதற்கு நாடு தழுவிய இயக்கம் ஒன்றை தொடங்கவிருப்பதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அக்கட்சி மாநிலங்களின் உரிமைகளில் அதிகளவில் தலையிட ஆரம்பித்தது. முக்கியமாக உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையோடு அக்கட்சி வெற்றி பெற்றதும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் ஆட்சிதான் இருக்க வேண்டுமென்பதில் முனைப்போடு இருக்கிறது. தமிழகம், புதுச்சேரி, டெல்லி, மேற்கு வங்காளம் என தன்னால் காலூன்ற முடியாத மாநிலங்களில் பாஜக தனது கைக்கூலிகளை வைத்து அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வீரியமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது. ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகள் எதனையும் தெளிவாக எடுத்ததாக தெரியவில்லை. மேலும் இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு தீவிரமாக இல்லையென்றே கருதத் தோன்றுகிறது. உதாரணமாக ஜிஎஸ்டி வரி அறிமுக விழா கூட்டத்துக்கு எதிர்க்கட்சிகளிலிருந்து சில கட்சிகள் சென்று கலந்துகொண்டதே உதாரணம்.

இந்நிலையில் மத்தியில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க. அரசு, மாநில அரசுகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுத்து வருவதாகவும், பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக 18 எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்தப்போவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மோடி அரசு பொறுப்பேற்றதில் இருந்து வெளிநாடுகளுடனான இந்தியாவின் உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. மத்திய அரசு, மாநிலத்தில் ஆளும் அரசுகளை சுதந்திரமாக செயல்பட அனுமதி மறுக்கின்றது. மத்தியில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக 18 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாடு தழுவிய இயக்கம் நடத்த உள்ளோம். வருகிற ஆகஸ்ட் 9- ஆம் தேதி முதல் பா.ஜ.க.விற்கு எதிரான திட்டங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்க உள்ளது. என்று கூறினார். இந்த நாடு தழுவிய இயக்கம் பாஜக மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடுவதை தடுத்து மாநில உரிமைகளை காக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*