ரூபா வெளியிடும் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள்!

பரப்பன அக்ரஹாரா சிறையில் 2 கோடி ரூபாய் லஞ்சப்பணம் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பரமேஸ்வரனின் உதவியாளர் பிரகாஷ் மூலம் கைமாறியதாகவும், அவர் சசிகலாவை சிறையில் அடிக்கடி சந்தித்திருக்கிறார் என்றும் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், இதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இதனை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்து வந்தனர். இதனையடுத்து டிஐஜி ரூபா மற்றும் டிஜிபி சத்யநாராயண ராவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் சசிக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பான 2 வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று விசாரணை நடத்தி வருகிறது. நேற்று கூடிய சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டத்தில் ஆஜரான கர்நாடகா சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரட், டிஜஜி ரேவண்ணா ஆகியோர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என்று கூறினர்.

இந்நிலையில், சிறைத்துறை டிஐஜியாக இருந்து இந்த விஷயங்களை அம்பலப்படுத்திய ரூபா தற்போது அடுத்தடுத்த அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவர் தற்போது இதுகுறித்து கூறுகையில், 2 கோடி ரூபாய் லஞ்சப்பணம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரனின் உதவியாளர் பிரகாஷ் மூலம்தான் சிறைத்துறை அதிகாரிகளுக்கு கை மாறியதாகவும் பிரகாஷ் சசிகலாவை சிறையில் அடிக்கடி சந்தித்திருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார். இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இந்த பிரகாஷூம் விசாரிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சசிகலா சிறையில் இல்லாமல் சிறைக்கு வெளியே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நான் விசாரித்தேன். அதை நேரடியாக கண்டுபிடிக்கவும் முயற்சி செய்தேன். ஆனால் என் கண்ணில் அவர் சிக்கவில்லை அப்படி அவர் வெளியில் சென்றதை நான் கண்டுபிடித்திருந்தால் எனது நடவடிக்கை கடுமையாக இருந்திருக்கும். அவரிடம் ஐபோன் இருந்ததாகவும், எனக்கு தகவல் கிடைத்தது என்றார். மேலும் இந்த விவகாரத்தின் பின்னணியில் பாஜகதான் இருக்கிறதென்று கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் என்னை எந்த பாஜக தலைவரும் இயக்கவில்லை என்றார்.

தற்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. ஒருவேளை ரூபா கூறியது போல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மூலம் லஞ்சப்பணம் சிறைத்துறை அதிகாரிகளுக்கு கைமாறியது உறுதியானால் கர்நாடகா அரசுக்கு பெரும் சிக்கல் உருவாகும். இந்த விவகாரத்தை வைத்து பாஜக கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க முயல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது உறுதியானால் சசிகலாவின் சிறை தண்டனை மேலும் பல வருடங்கள் நீடிக்கப்படும். இந்த விவகாரத்தால் கர்நாடகா அரசுக்கும், சசிகலாவுக்கும் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*