கதிராமங்கலம்: தந்தை மறைவு போராளிக்கு கிடைக்குமா பரோல்?

ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி சிறையில் இருக்கும் பேராசிரியர் ஜெயராமனின் தந்தை உடல்நல குறைவால் காலமானார்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வந்ததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து கடந்த 30-ஆம் தேதி எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கசிவு ஏற்பட்டது. மேலும் திடீரென்று தீயும் பற்றியது. இதனால் பதற்றமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தை வன்முறையாக மாற்றி மக்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராடிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் குழு தலைவர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர் காவல்துறையினர். மக்கள் நலனுக்காக போராடியவர்கள் மேல் 12 வழக்குகளை போட்டுள்ளது காவல்துறை. இதனையடுத்து தங்களுக்கு ஜாமீன் வேண்டும் என அவர்கள் மனுத் தாக்கல் செய்தும் இரண்டு முறை அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். மேலும் கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று கதிராமங்கலம் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கைதாகி சிறையில் இருக்கும் பேராசிரியர் ஜெயராமனின் தந்தை தங்கவேலு மயிலாடுதுறையில் உடல்நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜெயராமனை சிறையிலிருந்து வெளிவிட வேண்டுமென்று ஜெயராமனின் மனைவி அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஜெயராமனை வெளிவிட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார். மக்கள் நலனுக்காக போராடுபவர்களை தொடர்ந்து ஒடுக்குமுறை கொண்டு ஒடுக்கி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஜெயராமனை அவரது தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக வெளிவிட வேண்டுமென்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*