நாற்காலி சண்டையில் அதிமுக அமைச்சர், துணை சபாநாயகர்!

பல்லடத்தில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அருகில் அமர்வதற்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். விழா தொடங்குவதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியின் அருகே அமர்வதற்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணனுக்கும் , சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. முதலமைச்சரின் அருகே அமர்வதற்காக ஒரு நாற்காலியை இருவரும் பிடித்து இழுத்து மோதிக்கொண்டனர். மேலும் அவர்கள் தகாத வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். இதையடுத்து பொள்ளாச்சி ஜெயராமன் மேடை ஓரத்தில் போடப்பட்டிருந்த  நாற்காலியில் அமர்ந்தார். இந்த மோதலை பார்த்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி செய்வதறியாமல் திகைத்து நின்றார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவர் அருகில் அமர்வதற்கு இல்லை அவர் அருகில் செல்வதற்கும் அவர் அருகில் நிற்பதற்குமே அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் தயங்கி மிகவும் பவ்யமாக செல்வார்கள், நிற்பாற்கள். ஆனால் அவரது மறைவுக்கு பிறகு அதிமுக அமைச்சர்களின் நிலையும், எம்.எல்.ஏக்களின் நிலையும் தலைகீழாக மாறியிருக்கிறது. ஜெ இருந்த போது பேசுவதற்கே பம்மிய அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் இப்போது தங்களது விருப்பத்துக்கு பேசியும், செயல்பட்டும் வருகின்றனர். அமைச்சரும். துணை சபாநாயகரும் நாற்காலிக்காக தற்போது மேடையில் சண்டை போட்டிருப்பதன் மூலம் ஒரு முதல்வராக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாக பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*