ஜெ மணி மண்டபம் : தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் நோட்டீஸ்!

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட தடைவிதிக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உடல், சென்னை, மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.  அதனையடுத்து கடந்த 28-ஆம் தேதி சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனாவில் உலகத்தரம் வாய்ந்த மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு தடைவிதிக்கக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் துரைசாமி பொதுநல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில்  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சட்டவிரோதமாக மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர் உடலை வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும். அதேபோல, மெரினாவில் புதிய கட்டமைப்புகள் எழுப்பத் தடை உள்ள நிலையில், ஜெயலலிதாவின் மணி மண்டபம் கட்ட அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணா மற்றும் சேஷாயி ஆகியோர், இது குறித்து பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு. இந்த வழக்கை ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*