கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யா கைது?

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யா இன்று காலை மதுரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

2009-ஆம் ஆண்டு தலித் மாணவர் விடுதியில் மன்னர் கல்லூரி மாணவர் ஒருவர் பாம்பு கடித்து இறந்தார். அரசாங்கம் தலித் மாணவர் விடுதியை சரியாக பராமரிக்காமல் இருந்ததே இதற்கு காரணம் என்பதால், தலித் மாணவர் விடுதியை மேம்படுத்தவும், இறந்த மாணவனின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்கவும் பல்வேறு மாணவர்கள் இணைந்து மதுரை அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் தோழர் திவ்ய பாரதியும் கலந்துகொண்டார். இதற்காக 2009-ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு போடப்பட்டு எட்டு ஆண்டுகளான நிலையில், இன்று அவரை கைது செய்து மதுரை Jm2 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து திவ்ய பாரதி, “தொடர் அரசியல் செயல்பாட்டில் இருப்பவர்களை முடக்குவதற்கு அரசாங்கம் செய்யும் வேலைதான் இது” என்று தெரிவித்துள்ளார்.

கையால் மலம் அள்ளும் தலித் மக்களின் அவல வாழ்வு பற்றிய ஆவணப்படத்தை இயக்கியிருந்தார் திவ்யா. இந்த படத்தை தமிழக காவல்துறை தடை செய்திருந்தது. ஆனால் சமூக ஆர்வலர்களும், இயக்கங்களும் இப்படத்தை பரந்து பட்ட அளவில் தமிழகத்தில் திரையிட்டு வந்ததோடு இது பற்றிய விவாதங்களிலும் ஈடுபட்டு வந்தனர். கக்கூஸ் ஆவணப்படத்தை இயக்கிய திவ்யாவுக்கு 2017 -ஆம் ஆண்டிற்கான “பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது” வழங்கப்பட இருந்தது. வருகிற 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஆழ்வார்பேட்டை சிஐடி நகர் கவிக்கோ மன்றத்தில் நிகழவிருக்கும் விழாவில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட இருந்த நிலையில், அவரை கைது செய்திருக்கின்றனர். ‘கக்கூஸ்’ ஆவணப்படம் தலித் மக்கள் மீது மேட்டுக்குடி மக்களும் அரசாங்கமும் மலம் அள்ளும் தொழிலை திணிப்பது பற்றி பேசியிருந்தது. இந்த காரணத்துக்காகதான் அவரை பழைய வழக்கில் கைது செய்திருப்பார்கள் என கருதப்படுகிறது.

1 Comment

  1. பட்டியல் நீண்டுகொண்டே போகுமா? அடுத்தது நானா? நீயா? அவனா/அவளா? என முதுகொலும்புள்ள ஒவ்வொருவரும் ஏதிர்பார்த்திருக்கும் நிலமை தோன்றிவிட்டதா? தோண்றினால், அதற்காக அரசுக்கு நன்றி சொல்லிக்கொல்வோம். ஏன் தெரியுமா? போலிகளினதும், நடிப்புப் போராளிகளினதும் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது, அவர்களின் தொல்லை அதிகரித்து விட்டது. இவ்விதமானவர்கள் களத்தைவிட்டு இறங்கிசெல்ல அரசு உதவ உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.


*