தண்டனை ரத்து கோரி புதிய ஜனாதிபதிக்கு நீதிபதி கர்ணண் முதல் மனு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிபதி கர்ணன் தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி புதிய ஜனாதிபதிக்கு மனு அனுப்பியுள்ளார்.

நீதிபதிகள் மீது தொடர்ந்து ஊழல் புகார் கூறி வந்த நீதிபதி கண்ணன் கொல்கொத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய போதே உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை அளித்தார்கள். தலைமறைவாக இருந்த அவர் ஓய்வு பெற்ற பின்னர் சரணடைந்தார். நீதிபதி கர்ணனை தண்டிப்பது சரியல்ல என்றும் நீதிமன்ற மாண்புகளுக்கு அது களங்கம் கற்பிக்கும் என்றும் பல்வேறு தலைவர்கள் கோரிக்கை விடுத்த போதிலும் அதை கண்டு கொள்ளாத உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவரை சிறைக்கு அனுப்பினார்கள்.

கடந்த மாதம் 20-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட அவர் பல முறை ஜாமீன் மனு போட்டும் அந்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் கொல்கொத்தா சிறையில் இருக்கும் அவர்  புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ராம்நாத் கோவிந்துக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற சில நிமிடங்களில் இந்த மனு அவருக்கு மெயில் மூலம் அனுப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர், கூடுதல் செயலாளர் மற்றும் தனி செயலாளருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. நேரடியாகவும் மனுவை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என கர்ணனின் வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக, பரோல் வழங்கக் கோரி மேற்கு வங்க ஆளுனர் கேசரி நாத் திரிபாதிக்கு கர்ணன் கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*