எடப்பாடி பழனிசாமி சொந்த தொகுதியில் ஸ்டாலின் தலைமையில் மனிதச் சங்கிலி!

தமிழகத்தில் திட்டமிட்டப்படி திமுக சார்பில் நாளை மனித சங்கிலி போராட்டம் நடைபெறுமென்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்திருந்த நிலையில் எம்.ஆர். சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், திமுக நடத்தும் இந்த போராட்டத்தில் அரசியல் ஆதாயம் இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் நீட் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது போராட்டம் நடத்துவது சட்ட விரோதமானது எனவே இதனை தடை செய்ய வேண்டுமென்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, திமுக நடத்தவிருக்கும் போராட்டத்தை எப்படி தடை செய்வது என்ற கேள்வியை எழுப்பி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஆனால் தமிழக அரசு வழக்கறிஞர் திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்துக்கு தமிழக அரசின் சார்பில் அனுமதி வழங்கவில்லை என்று கூறினார். இதனால் திமுகவினரிடையே பதற்றம் நிலவுகிறது. மேலும் திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், திமுக கட்சியின் முதன்மை செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் இதுகுறித்து கூறுகையில், திமுக சார்பில் நடத்தப்படுமென்று அறிவிக்கப்பட்ட மனித சங்கிலி போராட்டம் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுமென்றும் சேலத்தில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*