நீட் அநீதி: திமுக மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு தடை!

Chennai: DMK working president M K Stalin arrives along with his party MLAs at the Tamil Nadu Secretariat in Chennai on Saturday. PTI Photo by R Senthil Kumar(PTI2_18_2017_000041A)

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி திமுக நடத்தவிருந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என்று அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்திருந்தன. அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஆயிரக்கணக்கானோரை மனித சங்கிலியில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான வழக்கு  நிலுவையில் உள்ளதால் போராட்டம் நடத்துவதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எம்.ஆர்.சரவணன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது போராடுவது சட்டவிரோதமானது என்றும் திமுக அரசியல் ஆதாயத்துக்காக போராடம் நடத்துவதாகவும் அதனால்  திமுக சார்பில் நாளை நடைபெற உள்ள மனிதசங்கிலி போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்றும் கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் தமிழகம் முழுவதும் திமுக நடத்தவிருக்கும் மனித சங்கிலி போராட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என்று தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார் . இதன் மூலம் நாளை திமுக நடத்த இருந்த மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு ஆளும் அதிமுக அரசு தடை விதித்துள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*