ஓபிஎஸ்ஸை எதிர்த்து போராடிய 400 பேர் மீது வழக்குப் பதிவு!

தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிலத்திலுள்ள கிணறுக்காகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் 400 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் மூன்று ராட்சசக் கிணறுகள் உள்ளன. அதேபோல, 18 ஏக்கரில் நிலமும் உள்ளது. இந்நிலையில், ஊரில் உள்ள பொதுக் கிணற்றில் தண்ணீர் இல்லாததால், அங்கு, தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஊர் கிணற்றில் தண்ணீர் வற்றிப்போகக் காரணம், பொதுக் கிணற்றுக்கு அருகே ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்தில் மூன்று ராட்சசக் கிணறுகளில் இருந்து, அதிக அளவு தண்ணீர் எடுக்கப்படுவதுதான் என்று ஊர் மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

இந்தக் கிணற்றை ஊர் மக்களுக்கு விற்க வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து அந்த கிணற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட்டுவிடுவதாக ஓபிஎஸ் கூறியிருந்தார். ஆனால் அவர் அந்தக் கிணறு மற்றும் அருகில் இருந்த நிலத்தை, தனது நண்பர் சுப்புராஜ் என்பவருக்கு விற்றுவிட்டார். எனவே பொதுமக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 300 பெண்கள் மற்றும் 100 ஆண்கள் மீது தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது ஐ.பி.சி 143 மற்றும் 188 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*