பீகாரில் மோடியின் மெகா ஆபரேஷன்!

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது வெளிப்படையாக பாஜக முன் வைக்கும் கோஷம். காங்கிரஸ் மட்டுமல்ல இந்துத்துவ பரிவாரங்கள் தவிற வேறு எந்தக் கட்சியும் இல்லாத பாஜக தலைமையிலான ஒற்றையாட்சி என்பதே பாஜகவின் இலக்கு அந்த இலக்கை நோக்கி பயணிக்க ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு உத்தியை பிரயோகிக்கிறது.
பிளவு படுத்துவது, கைப்பற்றுவது, மிரட்டுவது என பலப்பல பாணிகள். அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை அப்படியே அபகரித்துக் கொண்ட பாஜக அதே பாணியைத்தான் தமிழகத்திலும் பின்பற்றுகிறது. யார் சிறந்த அடிமை என்பது மட்டுமே பன்னீருக்கும் , எடப்பாடி பழனிசாமிக்கும் நடக்கும் மோதல்
உத்திரபிரதேசத்தில் எதிர்க்கட்சிகளை பிளவு படுத்தியதோடு அகிலேஷுக்கும், அவரது தந்தைக்கும் இடையில் மோதலை மூட்டி தனித்து நின்றே வென்ற பாஜகவின் அடுத்த குறி பீஹார், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்கள். ஒடிசாவில் பிஜு பட்நாயக் விழித்துக் கொண்டார். அதனால் ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் வதந்திகள் மூலம் கலவரங்களைத் தூண்டி வெல்லும் கணக்கோடு களமிரங்கியிருக்கும் பாஜகவுக்கு பீஹாரின் மிகப்பெரிய தடையாக இருந்தது. லாலு, நிதிஷ் குமார் கூட்டணி.
இந்த கூட்டணியை உடைப்பதுதான் பாஜகவின் நோக்கம் தமிழகத்தில் அடிமைகளை வழிக்குக் கொண்டு வர வருமானவரித்துறையையும், சிபிஐயையும் எப்படி பயன்படுத்தியதோ அதே பாணியில் லாலுவின் மகள்,மகன் உள்ளிட்ட உறவினர்களை குறிவைத்தார்கள்.
பாஜகவின் வெற்றியை தடுக்க 2015-ஆம் ஆண்டு மெகா கூட்டணியை உருவாக்கிய லாலு, நிதிஷ் குமார் 2015 சட்டமன்ற தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் கட்சி 80 இடங்களிலும், நிதிஷ்குமாரின் கட்சி 71 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 27 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தன. அதிக இடங்களில் வென்ற லாலு முதல்வர் பதவியை நிதிஷ் குமாருக்கு விட்டுக்கொடுத்தார். தன் மகன் தேஜஸ்வியை துணை முதல்வராக்கினார்.
தேஜஸ்வி துணை முதல்வரானதை நிதிஷ் விரும்பாத நிலையில் இருவருக்கும் இடையில் பனிப்போர் நடந்து வந்ததை ஊடகங்கள் பல முறை சுட்டிக்காட்டி எழுதின. இந்த முரண்பாட்டைத்தான் அழகாக பயன்படுத்திக் கொண்டது பாஜக.
நிதிஷ் குமாரோடு தொடர்பை ஏற்படுத்திய பாஜகவை பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலும், ஜனாதிபதி தேர்தலிலும் ஆதரித்தார் நிதிஷ் இதை லாலு விரும்பவில்லை. அப்போதே இருவருக்கும் இடையில் விரிசல் உருவாகி விட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு முறை சமரச முயற்சிகளுக்காக வந்து போக அந்த சந்திப்பிற்கு நிதிஷ் ஒத்துழைப்பு வழங்க வில்லை.
முரண்பாடுகள் கூர்மையடைந்த நிலையில் 2006-ஆம் ஆண்டு ரயில்வே ஹோட்டல்களை வாடகைக்கு விட்டதில் ஊழல் நடந்திருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் லாலுவின் மகனை குறிவைத்து ரெய்ட் அடித்தார்கள். ஊடகங்கள் மூலம் ஊழல் ஊழல் என்று காட்டுக்கத்தல் கத்த தேஜஸ்விக்கு நெருக்கடி உருவாகியது. சி.பி.ஐ வழக்கையும் பதிவு செய்ய தேஜஸ்வி ராஜிநாமா செய்ய வேண்டும் என்பது நிதிஷ்குமாரின் கோரிக்கை.
ராஜிநாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என்று லாலு மறுத்து விட்டார். பாஜகவின் மிரட்டலை தன் சூழலுக்கு பயன்படுத்தி லாலுவை கட்டுப்படுத்த நினைத்த நிதிஷ்குமாரின் எண்ணங்கள் பலிக்கவில்லை. காங்கிரஸ் எடுத்த சமாதான முயற்சிகளுக்கு நிதிஷ் குமார் ஒத்துழைக்கவில்லை. ஊழல் கரைபடிந்த ஒருவரை ராகுல்காந்தி ஆதரிக்கிறார் என்று பாஜக முதல்வர் போல கமெண்ட் அடித்தார் நிதிஷ்.
இப்போது தேஜஸ்வி ராஜிநாமா செய்ய மாட்டார் என்று தெரிந்தது ராஜிநாமா செய்கிறார். அடுத்த சில நொடிகளில் மோடி நிதிஷ்குமாரை வாழ்த்தி டுவிட் செய்கிறார். பாஜகவின் செயற்குழு கூடி நிதிஷ்குமாருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறது.71 உறுப்பினர்களைக் கொண்ட நிதிஷ்குமாரின் அரசுக்கு பாஜக ஆதரவு இருப்பதால் இப்போதைக்கு நிதிஷ் ஆட்சி கவிழாது.
ஆனால் இதில் லாலு என்ன சொல்கிறார் என்பதுதான் இன்றைய தேதியில் முக்கியத்துவம் வாய்ந்தது.
“ பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என நிதிஷ் குமார் வாக்குறுதி அளித்து உள்ளார். நிதிஷ் குமாருக்கும் நான் கோரிக்கை விடுக்கின்றேன்… ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாக அமர்ந்து பேசவேண்டும், புதிய தலைவரை தேர்வு செய்து ஆட்சி அமைக்க வேண்டும். அவருக்கு இதில் நாட்டமில்லை என்றால் அவர்கள் ஏற்கனவே பாரதீய ஜனதாவுடன் இணைய திட்டமிட்டுவிட்டார் என்பதை நிரூபித்துவிடும் என்றார்.
பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்றுதான் மெகா கூட்டணி அமைக்கப்பட்டது அந்த கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அமர்ந்து பேசட்டும் என்கிறார் லாலு ஆனால் அதற்கு நிதிஷ்குமார் தயார் இல்லை. ராஜிநாமா செய்த அடுத்த சில நிமிடங்களில் பாஜக நிபந்தனையற்ற ஆதரவு, இதோ இன்று பதவியேற்கிறார் நிதிஷ்குமார்.

தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் திரள முடியாமல் திணறி வரும் நிலையில் இந்திய மக்களை பாதித்த இரண்டு இரு பெரும் சம்பவங்கள் கடந்து சென்று விட்டன. ஒன்று பணமதிப்பிழப்பு, இன்னொன்று ஜி.எஸ்.டி இந்த இரண்டிலும் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரள முடியாத நிலையில் இப்போது மெகா கூட்டணியும் முறிந்து விட்டது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவே வெல்லும் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. பாஜக அல்லாத கட்சிகளின் சந்தர்ப்பவாதமே பாஜகவின் வெற்றிக்கு காரணம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*