தினகரனுடன் எந்த பிரச்னையுமில்லை : திவாகரன்

அதிமுக கட்சியை நாங்கள் மீட்டெடுப்போம் என்று சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியுள்ளார். மேலும் தனக்கும் டிடிவி தினகரனுக்கும் எவ்வித பிரச்னையும் இல்லையென்றும் அவர் கூறினார்.

சிறையிலிருந்து வெளிவந்த டிடிவி தினகரனை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சர்கள் கட்சியிலிருந்து முழுமையாக ஒதுக்கி வைக்க. 30-க்கும் மேலான எம்.எல்.ஏக்கள் தன் பக்கம் இழுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அளிக்க ஆரம்பித்தார் டிடிவி தினகரன். இதற்கிடையே டிடிவி தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி கிடைத்ததும் ஆட்சிக்குள் அதிக அளவு தலையிடுவது திவாகரனுக்கு பிடிக்கவில்லையென்றும் அதனால் தினகரன் மேல் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் இருவருக்கும் மோதல் என்றும் கூறப்பட்டு வந்தது. மேலும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் சார்பில் மன்னார்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் திவாகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் நெருக்கடியால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து தினகரனின் நெருக்கடியை சமாளிக்க திவாகரனுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கை கோர்த்திருக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக திவாகரனின் சார்பில் நடத்தப்படவிருந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான பேனரில் டிடிவி தினகரனின் புகைப்படம் இடம்பெறாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படம் இடம்பெற்றிருந்தது. இதனால் இருவரின் மோதல் அப்பட்டமாக வெளியில் தெரிந்தது. இந்த சம்பவங்களை கேள்விப்பட்ட சசிகலா திவாகரன் நடத்தவிருந்த விழாவினை நடத்தக்கூடாது என்று கூறியதும் இந்த விழா ரத்து செய்யப்பட்டது. மேலும் தினகரனையும், திவாகரனையும் அழைத்து சமாதான முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சசிகலாவின் அண்ணியும், டிடிவி.தினகரனின் மாமியாருமான சந்தான லட்சுமி கடந்த சில நாட்களாக இருதய நோய் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  நேற்று காலை மருத்துவமனையில் சந்தானலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைதொடர்ந்து அவரது உடல் மக்கள் பார்வைக்காக தஞ்சாவூரில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக டிடிவி தினகரன் தஞ்சாவூர் சென்றார். அங்கு திவாகரனை சந்தித்தார் தினகரன். இதனையடுத்து இருவரும் ஆறுதல் கூறிக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திவாகரன் பேசுகையில், டிடிவி தினகரனுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நீர் அடித்து நீர் விலகாது. சக்கரவியூகத்தில் சிக்கியிருக்கும் அபிமன்யூ போல் தற்போதைக்கு அதிமுக சிக்கியிருக்கிறது. அதனை ஒன்றிணைந்து மீட்டெடுப்போம் என்று கூறினார். திவாகரனுக்கும் தினகரனுக்கும் ஏற்பட்ட மோதலை வைத்து தினகரனின் அரசியல் எதிர்காலத்தை ஒழித்துக்கட்டலாம் என்று நினைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு திவாகரனின் இந்த பேச்சு அதிர்ச்சியளித்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*