தீவிரமாகிறது கதிராமங்கலம் போராட்டம்!

கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டுமென்றும், போராடி கைதான 10 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்றும் கதிராமங்கலத்தில் நடந்து வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 30-ஆம் தேதி ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனம் பதித்திருந்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிவு ஏற்பட்டது. மேலும் திடீரென்று தீயும் பற்றியது. கசிந்த எண்ணெய் குடிநீரில் கலந்ததால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் அப்போராட்டத்தை வன்முறையாக மாற்றி தடியடியில் ஈடுபட்டனர். மேலும் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. அவர்கள் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தும் அவர்களது மனுவை இரண்டு முறை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டுமென்றும், கைதான 10 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அதனை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், ஓஎன்ஜிசி  நிறுவனம், கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும், கைதான 10 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் 5 பேர் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. இதனால், அப்பகுதியில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது. மேலும், கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்துவதற்காக சமூக வலைதளத்தில் அழைப்புகள் விடுக்கப்படுகின்றன என்ற தகவல்கள் வெளியானதையடுத்து சென்னை மெரீனா கடற்கரையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே நேற்று கும்பகோணம் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களுக்கு ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*