திருமாவளவன் பக்கபலமாக இருக்க வேண்டும் : ஸ்டாலின்

மாற்றம் வேண்டுமென நினைக்கும் தொல். திருமாவளவன் தனக்கு பக்கபலமாக இருக்க வேண்டுமென்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சி இரண்டு அணிகளாக சிதறி கிடக்கும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அதிமுகவின் இரண்டு அணிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து தமிழகத்தில் வலுவாக காலூன்ற முயன்று கொண்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. இதனால் தற்போதுள்ள அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர். மேலும் தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டுமென்ற கருத்தும் பல்வேறு தரப்பினரிடமும் பரவலாக எழ ஆரம்பித்திருக்கிறது.

இந்நிலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலனின் தாயார் நேசம்மாள் படத் திறப்பு விழா சென்னையில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மாற்றம் வேண்டும் என்று கோரும் திருமாவளவன் தனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஸ்டாலினின் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ’மக்கள் பிரச்சனைகளுக்காக திமுகவுடன் இணைந்து செயல்படுவதில் எந்தவித சங்கடமும் இல்லை, கூட்டணி பற்றி, தேர்தல் நேரத்தில் ஏற்படும் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்’ என்று கூறினார். ஸ்டாலின் திருமாவளவனுக்கு விடுத்த அழைப்பாலும், திருமாவளவனின் இணைந்து செயல்பட சங்கடமில்லை என்ற பதிலாலும் இனி வரும் தேர்தலில் திமுகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணி அமைக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*