அமித்ஷா தமிழகம் வருகை : பலப்படுமா பாஜக?

பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் பாஜகவினை வலுப்படுத்துவதற்காக 5 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார்.

மத்தியில் ஆளும் அரசாக பாஜக வந்த பிறகு பல மாநிலங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. முக்கியமாக இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாஜக பெற்ற பெரும்பான்மையான வெற்றி அந்த கட்சிக்கு அதீத தன்னம்பிக்கையை அளித்திருக்கிறது. அதன்பிறகுதான் மற்ற மாநிலங்களில் பாஜக ஆதிக்கம் செலுத்துவதை தீவிரப்படுத்தியது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பாஜக கட்சிதான் ஆள வேண்டுமென்பதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தன்னால் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்க முடிகிற மாநிலங்களில் தயங்காமல் அந்த செயலை செய்து ஆட்சியை பிடித்து வருகிறது. சமீபத்தில் கூட பீஹார் மாநிலத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி தனது ஆளாக நிதிஷ்குமாரை மாற்றி அவரை முதலமைச்சராக அமர வைத்துள்ளது. தற்போது குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி 6 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியிருக்கிறது. இதனால் பல மாநில கட்சிகள் பாஜகவிடமிருந்து எந்த நேரத்திலிருந்தும் நெருக்கடி வரலாம் என்பதால் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருந்து வருகின்றன. தன்னால் நேரடியாக அரசியல் குழப்பங்களை ஏற்படுத்த முடியாத மாநிலங்களில் பாஜக தனது கட்சிக்காரர்களை முக்கிய பதவியில் அமரவைத்து அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. புதுச்சேரி, மேற்கு வங்காளம் என மாநிலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். தமிழகத்தின் நிலைமை இந்தியாவுக்கே தெரியும். ஆனாலும் திமுக போன்ற வலுவான எதிர்க்கட்சிக இங்கு இருப்பதால் தமிழகத்தில் பாஜகவால் நேரடி அரசியல் குழப்பங்களை செயல்படுத்த முடியவில்லை. அதனால் அதிமுகவின் இரு அணிகளையும் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சிறிது சிறதாக காலூன்றி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வலுவாக காலூன்றுவதற்கு அதிமுகவின் இரண்டு அணிகளை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் தமிழகத்தில் இருக்கும் பாஜக கட்சியை வலுப்படுத்தவும் அது திட்டமிட்டிருக்கிறது.

இந்நிலையில், பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா தமிழகத்தில் பாஜகவை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்துவதற்கு தீவிரமாக இறங்கியுள்ளார். இதன் வெளிப்பாடாக வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி தமிழகம் வருகை தரும் அமித்ஷா,முதலில் தமிழகத்தில் கட்சி கூட்டங்களில் பங்கேற்று தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனைநடத்துகிறார். சென்னை, கோவையில் 3 நாட்களும், காரைக்குடியில் 2 நாட்களும் சுற்றுப்பயணம் செய்து கட்சி கூட்டங்களில்பேசுகிறார். ஏற்கனவே அமித்ஷா மே மாதம் தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களால் அவரதுவருகை ரத்து செய்யப்பட்டது. மே மாதம் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில்அமித்ஷாவும் தனது சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டார். இந்த நிலையில் அவர் மீண்டும் 5 நாள் சுற்றுப்பயணத்தைதொடங்க திட்டமிட்டுள்ளார். சென்னை வரும் அமித்ஷாவுக்கு விமான நிலையத்தில் பா.ஜனதா சார்பில் தொண்டர்கள் உற்சாகவரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர் மாநில பாரதிய ஜனதா அலுவலகமான கமலாலயம் வந்து கட்சி நிர்வாகிகளையும்,தொண்டர்களையும் சந்திக்கிறார்.  நாட்டில் உள்ள பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜகவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் பாஜகவின் ஆதிக்கத்தை எப்படி வளர்ப்பது குறித்த ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளுக்கு அமித்ஷா வழங்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் பா.ஜனதா மற்றும்ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை விளக்கி பிரச்சாரங்கள் மேற்கொள்வதன் மூலம் இந்த அமைப்புகளைபலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. மேலும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பாரதிய ஜனதாவின் செல்வாக்கை வளர்க்கவும்பாரதிய ஜனதா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிற்படுத்தப்பட்டஅமைப்புகளின் தலைவர்களை வரவழைத்து அவர்கள் மத்தியிலும் அமித்ஷா உரையாற்றுகிறார்.

தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் அமித்ஷாவின் தமிழக வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜெயலலிதா என்ற பிம்பம் உயிரோடு இருந்தபோது அதிகளவில் பேசாத தமிழக பாஜக தலைவர்கள் தமிழிசை சௌந்தர்ராஜன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் தற்போது சர்வ சுதந்திரமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் அமித்ஷாவின் வருகைக்கு பிறகு தமிழக பாஜகவின் செயல்பாடும், பாஜக தலைவர்களின் செயல்பாடுகளும் எவ்வாறு இருக்க போகிறதென்ற எதிர்பார்ப்பும் அனைவரிடத்திலும் பரவலாக எழுந்து வருகிறது. ஆனாலும் அமித்ஷாவின் வருகையால் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு வளராது என்றும், பாஜகவால் தமிழகத்தில் எந்த காலத்திலும் வலுவான கட்சியாக வளர முடியாதென்ற கருத்தும் பரவலாக வைக்கப்பட்டு வருகிறது. அமித்ஷாவின் தமிழக வருகை பாஜகவை பலப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*