ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர திமுக தயங்காது : ஸ்டாலின்

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர திமுக தயங்காது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. தொடர்ந்து முறைகேடு புகார்களில் சிக்கும் அமைச்சர்கள், மத்தியில் ஆளும் பாஜகவிடம் மாநில நலனை மொத்தமாக அடகு வைத்திருப்பது, பாஜக கொண்டு வரும் அழிவு தரும் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த கண்ணை மூடிக்கொண்டு அனுமதியளிப்பது, அதனை எதிர்த்து போராடும் மக்களை ஒடுக்குமுறை கொண்டு ஒடுக்குவது, மக்கள் நலனுக்காக போராடுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுப்பது, மாணவி என்று கூட பாராமல் குண்டாஸ் சட்டத்தை போடுவது, விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருவது, தமிழகத்தில் வறட்சியே இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பொய்யை கூறுவது போன்ற பல அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகிறது தமிழக அரசு. அரசாங்கம் செய்ய வேண்டிய நீர் நிலைகளை தூர் வாரும் பணியை செய்யும் திமுகவுக்கு தொடர்ந்து ஆளுங்கட்சிகாரர்களை வைத்து பணி செய்யவிடாமலும், சீரமைக்கப்பட்ட பகுதியை சீரழித்துக் கொண்டும் இருக்கிறது தமிழக அரசு. மேலும், தூர் வாரிய ஏரியை பார்வையிட சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கைது செய்தது காவல்துறை. தமிழக அரசின் இந்த செயல்பாடுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர திமுக என்றும் தயங்காது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சட்டவிரோதமாக ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் 89 கோடி ரூபாயை விநியோகித்தவர் எடப்பாடி பழனிசாமி. தடை செய்த குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அனுமதித்து, அதற்கு ரூ.40 கோடி லஞ்சம் பெற்றார்கள் என்ற புகாருக்கு உள்ளான அமைச்சரை பக்கத்தில் வைத்து கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி. ஏன், புகாருக்குள்ளான போலீஸ் அதிகாரிக்கு ஆவணங்களைக் காணாமல் அடித்துவிட்டு, டி.ஜி.பி. பதவி உயர்வு அளித்தது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. வருமான வரித்துறை அதிகாரிகளையே பணிசெய்ய விடாமல் தடுத்த அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும், நடவடிக்கை எடுக்காமல் சட்டத்தை முடக்கி வைத்திருப்பதும் இதே முதலமைச்சர் தான். ஒரே மாதத்தில் 5.16 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற அமைச்சர் விஜயபாஸ்கரை சட்டத்தை மீறி பாதுகாத்துக் கொண்டிருப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எல்லாவற்றையும் விட ‘குதிரை பேரம்’ மூலம் சட்டவிரோதமாக மெஜாரிட்டியை நிரூபித்துள்ள திரு எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டத்தின் ஆட்சி பற்றிப் பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை.

விவசாயிகள் வாழ்க்கையில் தி.மு.க. அரசியல் செய்கிறது”, என்று மனச்சாட்சியை அடகுவைத்து விட்டுப்பேசுகிறார் முதலமைச்சர் பழனிசாமி. 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது அதைக் கொச்சைப்படுத்தி உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்த ஆட்சி எது? விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றமே உத்தரவிட்டும் அதற்கு உச்சநீதிமன்றத்தில் தடைபெற்றது எந்த ஆட்சி? டெல்லியில் போராடும் விவசாயிகளுக்குப் பிரதமரை சந்திக்க நேரம்கூட வாங்கிக் கொடுக்க முடியாமல் இருக்கும் கையாலாகாத ஆட்சி எந்த ஆட்சி? எல்லாம் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ‘குதிரை பேர அதிமுக’ ஆட்சிதான் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதாக’, இன்னொரு குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். இது இந்த வருடத்தின் மிகப்பெரிய நகைச்சுவை என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். அதிமுக என்ற குழம்பிய குட்டையில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது எனக்கு மட்டுமல்ல, அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே தெரியும். தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் ஜனநாயத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள இயக்கம். ஆகவே, ஜனநாயக நீரோட்டத்தில் அமோக வெற்றியை பெறப்போகும் திமுக ‘குழம்பிய குட்டையில்’ மீன்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சட்டவிரோத, ஜனநாயக விரோத இந்த ‘குதிரை பேர’ அரசின் அராஜகத்திற்கும், தொடரும் ஊழல் பேரணிக்கும், நிர்வாகத்தை சீரழித்து, தமிழகத்தின் வளர்ச்சியை சுமார் இருபது ஆண்டுகள் பின்னோக்கி தள்ளிவிட்ட கொடுமைக்கும் காரணமான எடப்பாடி பழனிசாமி அரசை முடிவுக்குக் கொண்டு வர, திமுக என்றும் தயங்காது. அதற்கான ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க.வை மிரட்டி விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி போன்றோர் பகல் கனவு காண வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன். என்று அவர் கூறியுள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*