பிணம் போல் நடித்து விவசாயிகள் போராட்டம்!

விவசாயியை பிணம் போல் பாடையில் படுக்க வைத்து, ஊர்வலமாக தூக்கிச்சென்று தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 16-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய – மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தினம் ஒரு நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் இமாசல பிரதேசத்தை சேர்ந்த டேவிட் பாண்டே, அரியானாவை சேர்ந்த அகர்வால், ராஜஸ்தானை சேர்ந்த கால்மார் ஆகியோர் நேற்று ஜந்தர் மந்தருக்கு வந்து விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும்  50 கிறிஸ்தவ பாதிரியார்களும் விவசாயிகளை சந்தித்து ஆதரவளித்தனர். ஆனால் மத்திய அரசு விவசாயிகளை துளியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. மேலும் இங்குள்ள மாநில அரசும் மத்திய அரசுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் மொத்தமாக அடிபணிந்து நிற்கிறது.

இந்நிலையில் இன்று 15-வது நாள் போராட்டம் நடந்தது. காலை 10.30 மணியளவில் மனித மண்டை ஓடுகள், எலும்புகள், விஷ பாட்டில்கள் ஆகியவற்றுடன் விவசாயிகள் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்தனர். திருச்சி உறையூரை சேர்ந்த பிரகாஷ் என்ற விவசாயியை பிணம் போல் அலங்கரித்து பாடையில் படுக்க வைத்தனர்.  பின்னர் அந்த பாடையை 1 கிமீ தூரத்துக்கு தூக்கிச்சென்று போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், தமிழகத்தில் கடும் வறட்சியால் விவசாயம் பொய்த்து விட்டது. பயிர்களும் கருகி விட்டன. இதனால் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. வங்கிகள் நெருக்கடி காரணமாக பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வரவில்லை. எனவே வாழ்வதை தவிர சாவதே மேல் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அதை உணர்த்தவே இன்று பாடை கட்டி போராட்டம் நடத்தினோம். நாளை வேளாண் பொருட்கள் விளை நிர்ணய ஆணையத்தின் தலைவரை சந்தித்து மனு அளிக்க போலீசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கொடுத்தால் மனு அளித்து விட்டு திரும்பி விடுவோம். இல்லாவிட்டால் நாடாளுமன்றம் முன் படுத்து, உருண்டு போராட்டம் நடத்துவோம் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார். கடந்த 24-ஆம் தேதி விவசாயி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராமேஸ்வரத்தில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு மணிமண்டபத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி தமிழக விவசாயிகளின் பிரச்சனைக்கான தீர்வு குறித்து எதுவும் கூறவில்லை. குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும், விவாசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வது குறித்தும் ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*